Tuesday, 16 February 2016

தேன் மழை பொழிந்த சர்க்கரைப் பந்தல் ( வள்ளல்கள் - 2 )

17ம் நூற்றாண்டில் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்து வந்தார். அச்சமயத்தில் அமைச்சராக இருந்தவர் தளவாய் ராமப்பையர். இவர் பாளையக்காரர்களிடம் வரி வாங்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். கொங்கு நாட்டில் , ஆணூரில் வேளாளர் தலைவராக இருந்த பாளையக்காரர் பெயர் சர்க்கரைச் சம்பந்த மன்றாடியார். இவரும் ராமப்பையரிடம் வரி செலுத்தி வந்தார். சர்க்கரை இனிமையான பண்பாளராகவும் தமிழ்ப்புலவர்களை ஆதரித்து வாரி வழங்கும் வள்ளலாகவும் விளங்கினார். ஆதலாலேயே அனைவரும் மனமுவந்து சர்க்கரை என்று அழைக்கும்படியான அடைமொழியைப் பெற்றார். இவரை நாடி வந்த புலவர்கள் பொருள் மட்டுமல்லாது சர்க்கரையுடன் பழகி அன்பாகிய செல்வத்தையும் பெற்றுச் சென்றனர். அது மட்டுமின்றி அவருக்கு மரியாதை அளிக்கும் வண்ணம் அப்பகுதி மக்கள் , சமையலில் பயன்படும் சர்க்கரையை சர்க்கரை என்று கூறாமல், " இனிப்புப் பொடி" என்று வழங்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிகிறோம்.
ஒருமுறை ஆணூரில் கடும்பஞ்சம் நிலவியது. ஆதலால் சர்க்கரையிடம் இருந்த பல பசுக்களும் எருதுகளும் இறந்தன. அவராலும் அதே நிலையில் இருந்த வேறு சிலராலும் வரி செலுத்த இயலவில்லை. அவர்கள் தம் குறைகளை விண்ணப்பித்தும் பலன் இல்லை. ராமப்பையர் இவர்கள் அனைவரையும் சதுரகிரி துர்க்கத்தில் சிறையில் அடைத்தார்.
இந்நிலையில், சர்க்கரையை வெகு நாட்களாகக் காணும் ஆவலோடு இருந்த புலவர் ஒருவர் ஆணூருக்கு வந்தார். செய்தி அறிந்து மிகவும் மனம் நொந்தார். அங்கிருந்த மக்கள் நீங்கள் வேறொரு நல்ல சமயத்தில் வாருங்கள் என்று கூறிய போதும் கேட்காமல், வள்ளலைக் கண்டே தீருவேன் என்று உறுதி கொண்டு சதுரகிரி சிறைக்குச் சென்றார்.
மன்னர்களிடம் நேரிடையாகப் பேசுவது, கைதிகளைக் காண்பது போன்ற துணிவான செயல்களுக்கு அக்காலத்தில் புலவர்கள் அனுமதி பெற்றிருந்தனர். ஏனெனில் இவர்கள் கற்றறிந்த சான்றோர்கள் அல்லவா?
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பன்றோ?
சிறை என்றாலும் கைதிகளின் உறவினர்கள், புலவர்கள் வந்து செல்ல அனுமதி இருந்தது. 
புலவர் சிறைக்கு வந்தார். சர்க்கரையின் புகழ் பாடிய வண்ணம் சர்க்கரை யார் என்று வினவினார். அப்போது அங்கே கூட இருந்தவர்களில் ஒருவர் சிறையிலும் கூடவா யாசகம்? நல்ல சமயத்தில் வந்தீரே என்று புலவரை இகழ்ந்தார். அதற்கு, " பொருள் பெறுவோர் வீடு சிறை என்று பார்ப்பதில்லை. பொருள் கொடுப்பவர்க்கும் அந்தப் பேதம் இல்லை. நிலவை ஒருபுறம் இராகு பற்றிய போதும் மறுபுறம் அது தன் பால் ஒளியை வழங்கிக்கொண்டே செல்கிறதே. அதை நீங்கள் கண்டதில்லையோ? அந்நிலவைப் போன்றவர்கள் வள்ளல்கள் என்ற பொருளில் ஒரு பாடலைப் பாடினார். உடனே அவர்கள் இகழந்ததை விடுத்து, புலவரைத் தகுந்த மரியாதையுடன் சர்க்கரையிடம் அழைத்துச் சென்றனர். சர்க்கரையைக் கண்டவுடன் அளவற்ற மகிழ்ச்சி கொண்டார். எனினும் வாடிய பயிர் போல் சிறையில் பொலிவற்ற நிலையில் காண முடியவில்லை அவ்வள்ளலை. சர்க்கரையும் இக்கட்டான சமயத்தில் வந்த புலவரைத் தன்னால் முறையாக உபசரிக்க இயலவில்லை என்று மிகவும் மனம் நொந்தார். இருவரும் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர். திடீரென்று சர்க்கரைக்கு ஏதோ ஞாபகம் வந்தது. தனக்குத் தெரிந்த சிறை ஏவலாளிடம் ஏதோ சொல்லி அனுப்பினார். சிறிது நேரம் கழித்து அவன் ஏதோ தன் கையில் மூடிக் கொணர்ந்து அவர் கையில் தந்தான். சர்க்கரை "இந்த சமயத்தில் என்னால் உதவ முடிந்தது இது தான் " என்று சொல்லி அதைப் புலவரிடம் அளித்தார்.
புலவன் அதைப் பார்த்தான். அது ஒரு பொற்றாலியாக ( பொன்+தாலிஇருந்தது. புலவருக்கு நா எழவில்லை. மயிர்க் கூச்செரிந்து. என்ன இது என்று கேட்டார். இவ்வூரில் தங்கியிருக்கும் என் மனைவிக்குச் சொல்லி அனுப்பினேன். அவள் இதை அனுப்பினாள். கழுத்தில் மஞ்சட் சரடு இருக்கிறது. இது மிகை தானே. இப்போதுதான் இது மங்கலம் பொருந்தியதாயிற்று என்று அவர் சொல்லச் சொல்லப் புலவரின் கண்களில் நீர் சுரந்து வழிந்தது. புலவர் இத்தகைய வள்ளலைச் சிறையில் அடைத்த ராமப்பையர் எவ்வளவு கல் நெஞ்சராக இருப்பார் என்று எண்ணி அவரைக் காணச் சென்றார். ராமப்பையர் கையில் பொற்றாலியைக் கொடுத்தார். அது என்ன என்று கேட்ட போது , கீழ்க்கண்ட பாடலைப் பாடினார். தன் தவறை உணர்ந்த ராமப்பையர் சர்க்கரை மற்றும் அவரோடு சிறையில் இருந்த மற்றவர்களையும் விடுவித்தார்.
அவர் மனதில் நீங்கா இடம் பிடித்த சர்க்கரை தமிழ் உள்ளளவும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெறச் செய்த பாடல் இதோ.
"கொங்கினில் ராமப் பயனதி காரக் குரூரத்தினால் கங்குல் இராப்பகல் சர்வசங் காரஞ்செய் காலத்திலே சிங்கநற் சம்பந்தச் சர்க்கரை தேவி திருக்கழுத்தின் மங்கலி யந்தனைத் தந்தான் தமிழ்க்கவி வாணருக்கே"
அருஞ்சொற்பொருள்:
கொங்கினில் - கொங்கு + அதனில் 
கொங்கு நாட்டில் 
ராமப் பயனதி காரக் குரூரத்தினால் - ராமப்பையன் அதிகாரக் குரூரத்தினால் 
குரூரம் - கொடுமை
கங்குல் - இரவு
சங்காரம் - அழிவு
சர்வ சங்காரம் - எந்நேரமும் மக்களைத் துன்புறுத்திய பஞ்சம்
சிங்கநற் சம்பந்த சர்க்கரை - சிங்கம் போன்ற தலைவனும் மிக நல்லவனுமான சம்பந்த சர்க்கரை
தேவி - சர்க்கரையின் மனைவி
மங்கலி யந்தனைத் தந்தான் - மங்கலியம் தனைத் தந்தான்
மங்கலியம் - மாங்கல்யம் - பொன் தாலி
தமிழ்க்கவிவாணர் - கவிஞர்/ புலவர்
விளக்கம்:
கொங்கு நாட்டில், பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், ராமப்பையரின் அதிகாரக் கொடுமையால் சர்க்கரை சிறையில் இருந்தார். இரவு, பகல் எந்நேரமும் துயரம். அச்சமயத்தில் தன்னை நாடி வந்த இந்த தமிழ்ப்புலவரின் வறுமை நீங்க , தன் மனைவியின் தங்கத் தாலியைக் கொடுத்தான் . என்னே அவன் கொடையுள்ளம் ! என்னே அவன் புகழ்!
Ref :
https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D