Sunday, 18 September 2016

வறுமையைப் போக்கிய நாரை

நான் யாப்பிலக்கணம் பற்றி வலைதளத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த ஆசிரியர் நேரொன்றாசிரியத்தளை மற்றும் நிரையொன்றாசிரியத்தளைக்குச் சான்றாக இப்பாடலின் முதல் 2 வரிகளை எழுதி விளக்கினார். தளை புரிந்ததோ இல்லையோ இப்பாடல் என் மனதை மிகவும் கவர்ந்துவிட்டது. இப்பாடல் வரிகள் மிக எளிதாகப் பொருள் விளங்கிக் கொள்ளும் வகையில் உள்ளது.இவ்வளவு அழகான பாடல் எங்கள் பாட நூல்களில் இடம் பெறவில்லை என்பதே என் வருத்தம். எங்கள் பெற்றோர் காலத்தில் அவர்களின் தமிழ்ப் பாடநூலில் இப்பாடல் இருந்ததாகக் கேள்விப்பட்டேன் . 

இன்றைய கும்பகோணத்திற்கு அருகில் சத்திமுத்தம் என்றொரு ஊர் உள்ளது . 
அங்கு ஒரு புலவர் இருந்தார். அவர் தன் மனைவியுடன் ஒரு சிறு குடிலில் வறுமையில் வாழ்ந்து வந்தார் .சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்ற வழக்கு சரி தான் போலும். 

அக்காலத்தில் பாடல்கள் பாடிப் பரிசில் பெற்றாலொழியப் புலவர்களுக்கு வேறு வருமானம் ஏது?.இப்புலவர் பரிசில் பெற விரும்பி மதுரை வரை சென்றார். அப்போது மதுரையைப் பாண்டியன் மாறன் வழுதி ஆண்டுகொண்டிருந்தான். புலவர் அரண்மனை வாசலில் இருக்கிறார் . கண்ணகியைப் போன்றே இவருக்கும் வாயிற்காப்போனால் பிரச்சனை. இவர் எவ்வளவோ முயன்றும் தன் புலமையை வெளிப்படுத்தியபோதும் ஒன்றும் பலனில்லை .இவர் அரண்மனை செல்ல அனுமதி கிடைக்காததால்  வருத்தத்தோடு திரும்பினார் . ஒரு இடத்தில் வந்து படுத்தார் . வானத்தைப் பார்த்தவாறு தன்  மனைவியையும் வறுமையையும் எண்ணிக் கொண்டிருக்கிறார் . அப்போது 2 நாரைகள் அவர் மேலே பறந்து செல்கின்றன .நாரையைத் தன் மனைவிக்குத் தூது அனுப்புவதாக நினைத்து இப்பாடலைப் பாடுகிறார்.


"நாராய் நாராய் செங்கால் நாராய் 
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன 
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் 
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி 
வடதிசைக்கு ஏகுவீராயின் 
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி 
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி 
பாடு பார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு 
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் 
ஆடையின்றி வாடையில் மெலிந்து 
கையது கொண்டு மெய்யது பொத்தி 
காலது கொண்டு மேலது தழீஇப் 
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் 
ஏழையாளனைக் கண்டனம் எனுமே" 

சத்திமுத்தத்தில் இருக்கும் என் மனைவியைப் பார்த்து இச்செய்தியைக் கூறுங்கள் என்று நாரையை நோக்கிப் பாடுகிறார். 

பவள நிறம் கொண்ட பனங்கிழங்கு பிளந்தது போன்ற கூறிய மூக்கும் சிவந்த கால்களும் கொண்ட நாரையே !. நீயும் உன் துணையும் தென் திசையில் உள்ள கன்யாகுமரியில் நீராடி வட திசை நோக்கிச் செல்ல  நேர்ந்தால் வடதிசையில் சத்திமுத்தம் என்ற என் ஊர் உள்ளது. அங்குள்ள தீர்த்தத்தில் நீராடுங்கள் , அங்கு மழையில் நனைந்து உருக்குலைந்த சுவர் கொண்ட என் வீடு இருக்கும். என் மனைவி அச்சுவரின் கூரையில் இருக்கும் பல்லியின் குரலையே சகுனம்  கிடைப்பதாக எண்ணி அதைப் பார்த்துக்கொண்டிருப்பாள் . 
அவளிடம் உன் கணவனைக் கண்டோம் எனக் கூறுங்கள் . மன்னன் மாறன் வழுதி ஆளும் மதுரை நகரில் உன்  ஏழைக் கணவன் மேலாடையின்றி கைகளால் உடலைப் போர்த்தி மேல் உடலைத்  தழுவுமாறு கால்களை வயிறு வரை சுருக்கி வாடைக் காற்றால் மெலிந்து பெட்டிக்குள் இருக்கும் பாம்பு போல் உயிர் வாழ்கின்றான் என்று சொல்லுங்கள் என்கிறார் . 

இவர் பாடும் சமயம் பாண்டிய மன்னன் மாறுவேடத்தில் நகர்வலம் சென்று கொண்டிருந்தான்.மன்னன் நாரையின் மூக்கிற்கு உவமை தேடிக்கொண்டிருந்தான். பல அறிஞர்களிடம் கேட்டும் பலனில்லை .நாரையின் மூக்கைப் பனங்கிழங்கிற்கு ஒப்பிட்ட இப்பாடலைக் கேட்டு மிகவும் களிப்புற்றான்.தன்மேலாடையைப் புலவர் மீது எறிந்து விட்டு வேகமாகச் சென்றுவிட்டான். பின் காவலாளிகள் மூலம் புலவரை அரண்மனைக்கு வரவழைத்துத் தகுந்த வெகுமதி அளித்தான் . அவர் வறுமையும் நீங்கியது.

அருஞ்சொற்பொருள் :

நாராய்  - நாரை என்பது பறவையின் பெயர். அழைக்கும்போது நாராய் என்று விளிச்சொல் ஆனது.  
செங்கால் - சிவப்பான கால் 
பழம்படு பனையின் கிழங்கு - நாள்பட்ட பனைக்கிழங்கு (முற்றிய கிழங்கு)
பிளந்தன்ன - பிளந்து + அன்ன  - பிளந்தது போன்ற 
பவளக் கூர்வாய் - பவளம் போன்ற சிவப்பான நிறத்தில் கூர்மையாய் உள்ள வாய் 
பெடை - பெண் நாரை 
தென் திசைக் குமரியாடி - குமரியாடுதல் என்பது கன்யாகுமரியில் நீராடுதல் 
ஏகுவீராயின்- ஏகுவீர் +ஆயின் - ஏகுதல் - செல்லுதல் 
ஏகுவீர் +ஆயின்  - செல்வீர்களானால் 
எம்மூர் - எம் +ஊர்  
சத்திமுத்தம்  - இவ்வூர் ஒரு சைவத்தலமாகும் . கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது .
வாவி - நீர் நிலை 
கனைகுரல் பல்லி - கனைக்கும் குரல் கொண்ட பல்லி 
பல்லி பாடு பாத்திருக்கும் எம் மனைவி - பல்லியையே பார்த்துக்கொண்டிருக்கும் என் மனைவி (மிக வறுமை . பல்லியின் குரலைக் கொண்டு நல்ல சகுனமாக இருந்தால் அன்று உணவு கிடைக்கும் என்று நம்பிக்கை .அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலை )
எங்கோன் மாறன் வழுதி - எம் + கோன் - என் அரசன் மாறன் வழுதி 
தழீஇ - தழுவி 

Reference :