Friday, 15 January 2016

சீதக்காதி ( வள்ளல்கள் - 1 )

"செத்தும் கொடுத்தான் சீதக்காதி"

 சென்னையில் வெள்ளம் வந்த போது, எவ்வளவோ மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேருதவி செய்தனர். " காலத்தினால் செய்த நன்றி " அல்லவோ அது? அதற்கு நாம் எவ்வாறு கைம்மாறு செய்வோம்? பண்டைய காலத்தில் வாழ்ந்த மன்னர்களும் சரி மக்களும் சரி தன்னலம் கருதாது வாழ்ந்தனர். உணவு, உடை, உறைவிடம் , கல்வி, செல்வம் அனைத்தும் மக்களுக்கு எட்டும் வகையில் இருந்தது. எத்தொழில் செய்வோராயினும் உண்மையாகவும் நேர்மையாகவும் , தன் தொழில் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். இல்லாதவர்க்குப் பொருள் தந்து உதவுவது, பயணிகளுக்கும் அடியார்களுக்கும் தம் உறவினர் போல் கருதி உணவளித்து உதவி செய்வது இவை போன்ற செயல்களால் ,  விருந்தோம்பலுக்குப் பெயர் போனது நம் தமிழ்நாடு. அத்தகைய பெருமக்கள் வாழ்ந்து நமக்கு விட்டுச் சென்ற இயற்கைச் செல்வங்களே நம்மை இன்றும் காப்பாற்றி வருகின்றன. வழிபாட்டுத் தலங்கள் கூட வெறும் தலங்களாக அல்லாமல், கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம், அன்னதானம், கலை வகுப்புகள் அனைத்தும் நடைபெறும் இடமாக இருந்தது. அக்காலத்தில் புலவர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் தங்கள் திறனை வெளிப்படுத்தி மன்னர்களிடமும் செல்வந்தர்களிடமும் பரிசில் பெற்றுச் சென்றனர். அவர்களின் வருவாய் அதை மட்டுமே நம்பி இருந்தது. இவர்களை ஆதரிக்கப் பல நல்உள்ளம் படைத்த  வள்ளல்களும் இருந்தனர். நாடி வந்தவர்க்குப் பொன்னும் பொருளும் புகழும் அளித்தனர்.
அதுபோன்ற வள்ளல்களில் ஒருவர் தான் சீதக்காதி. ஒரு தமிழ் இசுலாமியர். இவரின் இயற்பெயர் ஷைகு அப்துல் காதிறு மரக்காயர். 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வாழ்ந்தவர்.  பரம்பரைச் செல்வந்தர்.  மிளகு வணிகம் செய்து பெரும்பொருள் ஈட்டியவர். சமய வேறுபாடின்றி தமிழ்ப் புலவர்களையும் ஏழை மக்களையும் பெரிதும் ஆதரித்தவர். நபிகள் நாயகத்தின் புகழ் கூறும் சீறாப்புராணத்தைப் பரப்பப் பெரிதும் உதவி செய்தவர்.
இவரைப் பற்றிச் சில சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும் உள்ளன.
ஒருமுறை, சீதக்காதி அவர்கள் காயல் நகருக்குச் ( இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல் பட்டினம் ஊராக இருக்கலாம் ) சென்ற போது, வறியவர் ஒருவர் தன் மகளின் திருமணத்திற்குப் பொருள் வேண்டினார். சீதக்காதி அவர்கள் உடனே தர முற்பட்ட போது, திருமணத் தேதி நிச்சயம் ஆன பின் பெற்றுக்ககொள்வதாகத் தெரிவித்தார். சீதக்காதி அவர்கள் அதன் பின் ஊர் திரும்பினார். சில காலம் கழித்து நோய்வாய்ப்பட்டு இறந்தார். அச்சமயம் அங்கு வந்தார் வறியவர். வள்ளல் பெருமானிடம் பொருள் பெற வந்தவர், அவர் இறந்த செய்தி கேட்டு இடிந்து போனார். அவரின் ஒரே நம்பிக்கைச் சுடரும் இறந்ததை நினைத்து , மிகவும் துயருற்றார். தனக்கு உதவ முன்வந்த பெருமானுக்கு அஞ்சலி செலுத்த எண்ணி, அவரை அடக்கம் செய்த பள்ளிவாடிக்குச் சென்றார். அமைதியாக அங்கே சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினார். அப்போது தான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சீதக்காதி அவர்களின் வலது கரம் வெளிப்பட்டது. அதில் முத்து பதித்த மோதிரம் ஒன்று இருக்கக் கண்ட ஊர்ப் பெரியவர்கள் அதை அவரிடம் தந்தனர். இறந்த பிறகும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய சீதக்காதி வள்ளலின் பெருமையை உணர்ந்த அவர்கள் " செத்தும் கொடுத்த சீதக்காதி புகழ் வாழி " என்று கூறினர். அன்று முதல் செத்தும் கொடுத்த சீதக்காதி என்று தமிழர்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றார். 

படிக்காசுப் புலவர் - ( பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் ) தனிப்பாடல்
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்,
தொலைவில் பன்னூல் ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம் 
அனுதினமும் ஈந்து சிவந்தது மால் சீதக்காதி இருகரமுமே.
சீதக்காதியின் வள்ளல் தன்மையை எடுத்தியம்பும் பாடல் இது. 

பொருள் :
மின்னார் - அழகிய பெண்டிர்
பாவாணர் -  மொழி அறிஞர்
பன்னூல் - பல நூல்கள்
தொலைவில் பன்னூல் - பிற நாட்டில் இருக்கும் நூல்கள்
சூரியகாந்திப் பூ , காய்ந்து சிவந்து. அழகிய பெண்டிரின் கண்கள் கூடும் போது சிவந்தன. மொழி அறிஞர்கள் தம் ஆய்வை விரிவாக மேற்கொள்ள பல நாட்டு நூல்களை ஆய்ந்து , அவர்கள் நெஞ்சம் சிவந்தது. ஆனால் , வள்ளல் சீதக்காதியின் இரு கரங்களும் தினமும் தன்னை நாடி வருவோர்க்குக் கொடுத்தே சிவந்தன.
இப்பாடலை உற்றுப் பார்க்கையில் கர்ணன் திரைப்படத்தில் வரும் "நாணிச் சிவந்தன நாதரார் கண்கள் " என்ற பாடல் இதை ஒட்டியே அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது.

சில குறிப்பிடத்தக்க செய்திகள்

இந்தியாவின்  மிகப்பழமையான முதல் பள்ளிவாசலான பழைய ஜும்மா பள்ளி கீழக்கரையில் அமைந்துள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையானது.
மற்றும் உலகின் பழமையான பள்ளிவாசல்களில் இது நான்காம் இடம் வகிக்கிறது.
சீதக்காதி அவர்களின் மகள் வழிச் சந்ததியினர் இன்றும் கீழக்கரையில் வசித்து வருகின்றனர்.

Ref :


Saturday, 9 January 2016

அன்னை - ( பகுதி - 4 )

நம் புராணங்களில், அன்னையின் தனிச்சிறப்பைப் பல இடங்களில் காண இயலும். அன்னையே தெய்வமாகவும் , தெய்வமே அன்னையாகவும் திகழ்வதோடு தெய்வங்களுக்கு அன்னையாக இருக்கும் பேறு பெற்றவர்களும் உண்டு. 

அன்னையே தெய்வமாய்

" மாத்ரு தேவோ பவ" 
என்கிறது தைத்ரிய உபநிஷதம். 

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்கிறது கொன்றை வேந்தன். 

பிள்ளையாருக்கும் முருகனுக்கும் நடந்த போட்டியில் , தன் அன்னை தந்தையே உலகம் என்று உணர்ந்து அவர்களை வலம் வந்து ஞானப்பழத்தைப் பெற்றார் பிள்ளையார்.  

ஆதிசங்கரர் தன் தாய் இறந்த போது, அவள் பிரிவைத் தாங்காது, அன்னையின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் வகையில் அவர் இயற்றியதுதான் "மாத்ரு பஞ்சகம்". 

தெய்வமே அன்னையாய் 

உலகிற்கே அன்னையான இறைவியைத் துதிக்கும் லலிதா சஹஸ்ரநாமம்  " ஸ்ரீ மாதா " என்றே தொடங்குகிறது. இறைவியை 1000 பெயர்கள் கொண்டு துதிக்கும் போதும் அம்மா என்று தொடங்கியே அந்த அன்பு அடியவர்களிடம் நிறைந்துள்ளது. 

குழந்தை அழும் போது தாயானவள் பொறுப்பதில்லை. உடனே ஓடி வந்து அணைக்கிறாள். தன் அடியவர்களுக்கு அவ்வாறே அருள்வதால் திருமகள் தாயார் என்று அழைக்கப்படுகிறாள்.  

சம்பந்தப் பெருமான் குழந்தையாய், நெடு நேரமாய் தந்தையைக் காணாது ' அம்மே அப்பே ' என்று சீர்காழி கோவில் கோபுரத்தைப் பார்த்து அழவே, இறைவி மனம் இரங்கி ஞானப்பால் ஊட்டினாள். அன்று முதல் திருஞானச்சம்பந்தர் ஆனார்.

 அபிராமியைத் துதிக்கும்போது , ' ... உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே..... ' என்று பாடினார் அபிராமி பட்டர்.  

(அபிராமி அந்தாதி பாடல் 33)

வள்ளலார் முருகனைத்  
 ' ... தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே ... '
 தன் தாய்  என்று முருகனைக் கூப்பிடுகிறார். 

புதுவையில் பலரின் வழிகாட்டியாய் அமைந்த அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்த Mother Mira ஸ்ரீ அன்னை என்றே தன் அடியவர்களால் அழைக்கப்படுகிறார். 

வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவில் மேரி  Mother Mary என்று ஆங்கிலத்திலும் , தூய மரி அன்னை என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார். 

இறைவனே தாயாக வந்து பிரசவம் பார்த்த தாயுமானவர் கதையை அறிந்திருப்பீர்கள் . ( தாயும் ஆனவர்) தாயும் ஆனவர் சேயாய்ப் பிறந்து தாயன்பைப் பெற விரும்பினார். அதைக் கீழே பார்ப்போம். 

தெய்வங்களுக்கு அன்னையாய் 

ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளும் அம்மா என்று தாய்ப்பாசத்திற்கு ஏங்கினார். காரைக்கால் அம்மையார் தன் கைகளாலேயே நடந்து தன்னைக் காண வந்த போது அம்மையே என்று அழைத்தார். 

மும்மூர்த்திகளான சிவன் , விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தாய் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஆசைப்பட்டனர். அந்தப் பேறு பெற்றவள் அத்திரி முனிவரின் மனைவி அனுசூயை ஆவாள். மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக வளர்த்து அவர்களைப் பிரிய மனமில்லாத போது, அவர்களின் அம்சமாய் தத்தாத்ரேயர் என்றவரை அளித்த பின் அனுசூயையிடம் விடை பெற்றனர். 

வெண்ணெய் திருடி, மண்ணை உண்டு ராதையின் உள்ளம் கவர்ந்த கள்வனை , வளர்க்கும் பேறு பெற்றவள் யசோதா. " என்ன தவம் செய்தனை " என்று போற்றப்பெற்றாள். 

எந்தக் கோணத்தில் நோக்கினும் அன்னை முழுநிலவைப் போன்றவள். அதன் குளிர்ந்த ஒளி போன்றது அவள் அன்பு. இருண்ட உலகிலும் இன்பம் தருவது.அன்பே ஓம் எனும் அருள் மந்திரம் என்கிறது ஸ்கந்த குரு கவசம். அந்த அன்பை நமக்கு அறிமுகம் செய்த அன்னையை வணங்கி எல்லா உயிர்க்கும் அன்பு செய்வோம்.