நம் புராணங்களில், அன்னையின் தனிச்சிறப்பைப் பல இடங்களில் காண இயலும். அன்னையே தெய்வமாகவும் , தெய்வமே அன்னையாகவும் திகழ்வதோடு தெய்வங்களுக்கு அன்னையாக இருக்கும் பேறு பெற்றவர்களும் உண்டு.
அன்னையே தெய்வமாய்
" மாத்ரு தேவோ பவ"
என்கிறது தைத்ரிய உபநிஷதம்.
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்கிறது கொன்றை வேந்தன்.
பிள்ளையாருக்கும் முருகனுக்கும் நடந்த போட்டியில் , தன் அன்னை தந்தையே உலகம் என்று உணர்ந்து அவர்களை வலம் வந்து ஞானப்பழத்தைப் பெற்றார் பிள்ளையார்.
ஆதிசங்கரர் தன் தாய் இறந்த போது, அவள் பிரிவைத் தாங்காது, அன்னையின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் வகையில் அவர் இயற்றியதுதான் "மாத்ரு பஞ்சகம்".
தெய்வமே அன்னையாய்
உலகிற்கே அன்னையான இறைவியைத் துதிக்கும் லலிதா சஹஸ்ரநாமம் " ஸ்ரீ மாதா " என்றே தொடங்குகிறது. இறைவியை 1000 பெயர்கள் கொண்டு துதிக்கும் போதும் அம்மா என்று தொடங்கியே அந்த அன்பு அடியவர்களிடம் நிறைந்துள்ளது.
குழந்தை அழும் போது தாயானவள் பொறுப்பதில்லை. உடனே ஓடி வந்து அணைக்கிறாள். தன் அடியவர்களுக்கு அவ்வாறே அருள்வதால் திருமகள் தாயார் என்று அழைக்கப்படுகிறாள்.
சம்பந்தப் பெருமான் குழந்தையாய், நெடு நேரமாய் தந்தையைக் காணாது ' அம்மே அப்பே ' என்று சீர்காழி கோவில் கோபுரத்தைப் பார்த்து அழவே, இறைவி மனம் இரங்கி ஞானப்பால் ஊட்டினாள். அன்று முதல் திருஞானச்சம்பந்தர் ஆனார்.
அபிராமியைத் துதிக்கும்போது , ' ... உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே..... ' என்று பாடினார் அபிராமி பட்டர்.
(அபிராமி அந்தாதி பாடல் 33)
வள்ளலார் முருகனைத்
' ... தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே ... '
தன் தாய் என்று முருகனைக் கூப்பிடுகிறார்.
புதுவையில் பலரின் வழிகாட்டியாய் அமைந்த அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்த Mother Mira ஸ்ரீ அன்னை என்றே தன் அடியவர்களால் அழைக்கப்படுகிறார்.
வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவில் மேரி Mother Mary என்று ஆங்கிலத்திலும் , தூய மரி அன்னை என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.
இறைவனே தாயாக வந்து பிரசவம் பார்த்த தாயுமானவர் கதையை அறிந்திருப்பீர்கள் . ( தாயும் ஆனவர்) தாயும் ஆனவர் சேயாய்ப் பிறந்து தாயன்பைப் பெற விரும்பினார். அதைக் கீழே பார்ப்போம்.
தெய்வங்களுக்கு அன்னையாய்
ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளும் அம்மா என்று தாய்ப்பாசத்திற்கு ஏங்கினார். காரைக்கால் அம்மையார் தன் கைகளாலேயே நடந்து தன்னைக் காண வந்த போது அம்மையே என்று அழைத்தார்.
மும்மூர்த்திகளான சிவன் , விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தாய் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஆசைப்பட்டனர். அந்தப் பேறு பெற்றவள் அத்திரி முனிவரின் மனைவி அனுசூயை ஆவாள். மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக வளர்த்து அவர்களைப் பிரிய மனமில்லாத போது, அவர்களின் அம்சமாய் தத்தாத்ரேயர் என்றவரை அளித்த பின் அனுசூயையிடம் விடை பெற்றனர்.
வெண்ணெய் திருடி, மண்ணை உண்டு ராதையின் உள்ளம் கவர்ந்த கள்வனை , வளர்க்கும் பேறு பெற்றவள் யசோதா. " என்ன தவம் செய்தனை " என்று போற்றப்பெற்றாள்.
எந்தக் கோணத்தில் நோக்கினும் அன்னை முழுநிலவைப் போன்றவள். அதன் குளிர்ந்த ஒளி போன்றது அவள் அன்பு. இருண்ட உலகிலும் இன்பம் தருவது.அன்பே ஓம் எனும் அருள் மந்திரம் என்கிறது ஸ்கந்த குரு கவசம். அந்த அன்பை நமக்கு அறிமுகம் செய்த அன்னையை வணங்கி எல்லா உயிர்க்கும் அன்பு செய்வோம்.
Impressive, Iswarya.
ReplyDeleteMalarkodi
அருமை. வளர்க✌
ReplyDelete