Showing posts with label manithar difference. Show all posts
Showing posts with label manithar difference. Show all posts

Thursday, 19 November 2015

காதல் - ( நளவெண்பா - 3 )

காதல் ...... காலம் காலமாய், கதைகளிலும் , காவியங்களிலும், திரைப்படங்களிலும் , வாழ்விலும் கண்டு வரும் ஓர் அழகான அனுபவம் .(இதை நான் சரியாக விளக்கவில்லை எனில், காதலர்கள் என்னை மன்னித்துவிடுங்கள்!). ஏனெனில், இதைச் சொல்ல வார்த்தைகள் போதாது.

காவியங்களில், எத்தனையோ காதலர்களைப்பற்றி அறிந்திருப்போம். அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட் இன்னும் பல. இவற்றில், என்னை ஈர்த்த நள - தமயந்தி காதலைப் பற்றிய நளவெண்பாப் பாடல் ஒன்றை இங்கே விளக்கப்போகிறேன். இங்கு நான் மிகச்சுருக்கமாகவே கூறியிருக்கிறேன் . இக்கதை அல்லது நளவெண்பா முழுதும் நீங்கள் அறிய விரும்பினால், அதற்கான இணைப்பைக் கடைசியாகத் தந்துள்ளேன்.( links in reference section below )

தமயந்தி சுயம்வரம் கதைச்சுருக்கம் :

அழகிலும்,அறிவிலும் தன்னிகரற்ற கற்புக்கரசி தமயந்திக்கு சுயம்வரம் நடக்கிறது. இதற்கு ( நளன் உட்பட ) மண்ணுலக மன்னர்கள் போக, விண்ணிலிருந்த தேவர்களும் வந்தனர். அவர்கள் தமயந்தி நளன் மீது கொண்ட காதலை அறிந்து, நளன் போலவே உருவு கொண்டு காட்சியளித்தனர்.

அனைவரும், நளன் போல் காட்சியளித்ததை எண்ணித் தமயந்தி குழம்பினாள். மனம் முழுதும் நளனை அடைவதிலேயே இருந்தது. நளனை எப்படி அறிவது ? . " அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்" என்று வள்ளுவர் கூறியது போல், அவள் அன்பை அடைத்த தாழ்ப்பாளைத் திறக்கவும் ஓர் வழி பிறந்தது .ஒரு கணம் மனதார இறைவனையும் தேவர்களையும் கீழ்வரும் பொருளில் வழிபட்டாள். " நான் நளன் மீது உயிர்க்காதல் கொண்டுள்ளேன் . மணவாழ்க்கை அவருடன் மட்டுமே.அவரைக் கண்டுகொள்ள உதவுங்கள் "

அவள் எவ்வாறு நளனைக் கண்டறிந்தாள் என்பதைப் பின்வரும் பாடல் மூலம் அறிகிறோம் .

சுயம்வரத்தில், தமயந்தி நளன் உருப்போந்த தேவர்களுக்கு நடுவில் நளனை அறிதல் - பாடல் 160

கண்ணிமைத்த லாடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி
நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே அன்னாள்
அறிந்தாள் நளன்றன்னை ஆங்கு


தேவர்களுக்கு மனிதர்களிடமிருந்து சில வேறுபாடுகள் உண்டு. தேவர்களின் கண்கள் இமைக்காது. கால்கள் பூமியில் படாது. அவர்கள் சூடும் மாலை வாடாது. ஆனால் மனிதர்களிடத்தில் இவற்றை (கண் இமைத்தல், மாலை வாடுதல், வியர்வை) இயல்பாகக் காண முடியும் .இவை நளனிடமும், காணப்பட்டன. இதை வைத்து நளனை மிகச் சரியாக அடையாளம் கண்டு , மாலை சூட்டினாள் தமயந்தி.

தமயந்தியின் அறிவாற்றலையும்,( Presence of mind ) உண்மைக் காதலையும் இதன் மூலம் அறிகிறோம்.

பின்குறிப்பு / Note :
 
கண் இமைத்தலால் - கண்கள் இமைப்பதால்
அடிகள் காசினியில் தோய்வதால் - கால் பாதங்கள் பூமியில் படுவதால்
காசினி - பூமி
எண்ணி நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே அன்னாள் - நறுமணமான தாமரையை விரும்பும் அழகிய நெற்றியுள்ள அந்தப் பெண்,நன்னுதல் - நல் + நுதல் ( நெற்றி)
அறிந்தாள் நளன்றன்னை ஆங்கு - நளனை அங்கே( அவ்விடத்திலே) அறிந்தாள்.
நளன்றன்னை - நளன் தன்னை
ஆங்கு - அங்கே


Ref :


kaasini - wiki


Nalavenba song 160 - Tamil VU


Nalavenba song 160 - Tamil VU - page 2

nannudhal


Annaal - wiki