Showing posts with label Thamayandhi. Show all posts
Showing posts with label Thamayandhi. Show all posts

Thursday, 19 November 2015

அரசி - ( நளவெண்பா - 2 )

நளவெண்பாவில், மேலும் சில இனிமையான பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இந்திய மண் வீரப்புகழ் நிரம்பியது. இங்கே தோன்றிய மக்களும் அப்படித்தான். நம் பண்டைக் காலத்திலிருந்தே பெண்களுக்கென்று தனி இடம் உண்டு. வீரம், பண்பு, கல்வி, தொழில், ஆட்சி என பல பரிமாணங்களில் (multi dimensional, multi faceted, versatile) தனித்தன்மை உள்ளவர்களாகவும், குலவிளக்காகவும், தெய்வத்தன்மை கொண்டவர்களாகவும் அவர்கள் இருந்ததை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

இதை நான் பெருமையுடனும் , மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஒரு பெண்ணாகப் பதிவு செய்கிறேன்.பெண்ணின் சிறப்பைப் பண்பு, திறமை ஆகிய இருவகையிலும், இங்கே காண முடிகிறது.இன்றைக்கு வேலைக்கும் சென்று, வீட்டையும் கவனித்து வரும் பெண்களே அதிகம். இவர்கள் எப்போதாவது, தங்கள் ஆற்றலை உணராது, சோர்வாக ( மனச்சோர்வு) இருப்பின் , இப்பாடலை நினைவுகூறுங்கள்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

அன்றைக்கு அரசாட்சிக்கு உறுதுணையாய் அமைச்சர்கள் இருந்தனர். தக்க நேரத்தில், மன்னருக்கு அறிவுரை கூறுவோர் இவர்களே. நான்கு விதப் படைகள், வாள், வேல் போன்ற கருவிகள் , முரசு, செங்கோல், வெண்கொற்றக்குடை ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. இவை யாவும் , இருப்பினும், அவர்களின் பண்பும் அறிவுமே நல்லாட்சிக்கு முக்கியமானதாக இருந்து.இதைக் கீழ் வரும் பாடல் கூறுகிறது.

தமயந்தியின் ஆட்சி - நளவெண்பா - பாடல் 31

நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழே
ஆளுமே பெண்மையரசு


தமயந்தியின் நான்கு குணங்களே (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு), நான்கு படைகளாகவும்(குதிரை, யானை, தேர்,காலாள்), அவளின் புலன்களே நல்ல அமைச்சர்களாகவும், அவளின் சிலம்பே முரசு போலவும், அவள் கண்களே வாள் போல் ஒளி, கூர்மை உள்ளதாகவும் , அவள் முகமே நிலவு போலவும் இருக்கின்றன. இவ்வாறு வெண்கொற்றக்குடைக் கீழ் நீதி வழுவாது தமயந்தி ஆட்சி செய்தாள்.

இவ்வாறு , ஒரு பெண் மிகச்சிறப்பாய் ஆட்சி செய்தது நமக்கு ஒரு முன் உதாரணம். பாரதி கண்ட புதுமைப்பெண் செய்வதெல்லாம் உண்மையில், புதியவை அல்ல. ஆண்டாண்டு காலமாய், பண்பும் திறமையும் மரபணுக்களிலேயே ஊறி வந்தவைகள்தாம். இருப்பினும் , அவை காலப்போக்கில் தொலைந்ததால், அவற்றை மீட்டெடுக்கிறோம்.
இந்தப் பதிவைப் படிக்கும் பெண்களுக்கு இது சமர்ப்பணம்.

பின்குறிப்பு/Note :

Example - Actual object

உவமை - உவமேயம் - ( Simile)
நாற்படை - நான்கு குணங்கள்
அமைச்சர் - ஐம்புலன்கள்
முரசு - சிலம்பு


Reference  :

Thamayanthi - Dinamani article

Thamayanthi rule - Tamil VU

Thamayanthi rule - Tamil VU - page 2

4 padaigal - wiki

4 gunangal - tamilthottam blog

Uvamai - wiki

Uvameyam - wiki

நளபாகம் - ( நளவெண்பா - 1 )

நாம் திருமண விருந்துகளில், நளபாகம் என்று குறிப்பிட்டு, உணவு தயாரிப்போரின் தலைவர் பெயரை எழுதுவதைப் பார்க்கிறோம்.யார் நளன்? அது என்ன நளபாகம் ? மகாபாரத்தின் கிளைக்கதைகளில் ஒன்று நள சரிதம். இதன் தலைவன் நளன், நீதி வழுவாமல், நிடத நாட்டை ஆண்டு வந்தான்.இவன் சமையல் கலையில் வல்லவன். ஆதலால் தான் " நள பாகம்" என்றானது.

நள சரித சுருக்கம் : 

நளன், விதர்ப்ப நாட்டை ஆண்ட பீமன் மகளான தமயந்தி மேல் காதல் கொண்டு சுயம்வரத்தில் அவளை மணந்தான். அது பொறுக்காத கலி நளன் தமயந்தியைப் பிரிக்க எண்ணித் தன் வேலையைக் காட்டினான். நளன் தன் சகோதரன் புஷ்கரனிடம் சூதாடி, அனைத்தையும் இழந்தான்.

தமயந்தி அவன் மீண்டு வரும் வரையில் தன் குழந்தைகளுடன் தந்தையுடன் விதர்ப்ப நாட்டிலேயே இருந்தாள். பின்னர் , நளன் இழந்ததை மீட்டு எவ்வாறு தமயந்தியை அடைந்தான் என்பது வரலாறு கூறும் கதை.

நளனும் தமிழும் 

இந்த நளன் சனி தோஷம் நீங்க வழிபட்ட தலமே திருநள்ளாறு ஆகும். மேலும் , இந்த நளசரிதம் படிப்பவர்களை சனி பாதிப்பதில்லை என்று புராணம் சொல்கிறது. இந்த நளன் கதையைத் தமிழில் மிக அழகாகப் பாடியவர் புகழேந்தி. அவர் இயற்றியதன் பெயர் " நளவெண்பா" ஆகும். அக்காலத்தில் இயற்றப்பட்ட செய்யுட்களுக்கென்று சில மரபுகள்,விதிகள் இருந்தன. அவை அனைத்தையும் பின்பற்றியே அப்படைப்புகளும் இருந்தன. கதை, கதை மாந்தர் தவிர கடவுள் வாழ்த்து (முதல் பாடலாக இடம் பெறும்), நாட்டுச்சிறப்பு, மக்கள் சிறப்பு ஆகியவை அதில் முக்கிய இடம் பெறும் . இதற்கு சான்றாய், நளவெண்பாவில் நிடத நாட்டுச்சிறப்பை உணர்த்தும் இப்பாடலை இங்கே பதிவு செய்கிறேன்.

காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு


ஒரு நாட்டின் வளத்தை, அளவிட நீர் வளம், நில வளம் இன்றியமையாததாகும். அவை சிறப்பாக அமைந்தால், அந்நாடு வளமானதாகும்.
நில வளம் கூறும் நிகழ்ச்சிகள் - குவளை,தாமரை மலர்தல், திருமகள்/ நிலமகள் கண்கள் போல் அந்நிலம் இருத்தல்.
நீர் வளம் குறிக்கும் நிகழ்ச்சிகள் - கெண்டை மீன் பிறழ்தல்,நாடு கடல் சூழ்ந்து இருத்தல்.
காமர் கயல் - கெண்டைமீன்
காவி முகை - காவி நிறமுள்ள மொட்டு(குவளைப்பூ)
நெகிழ - மொட்டு தான் மலரும்போது இருக்கும் மென்மை, மகிழும் உணர்வு
தாமரையின் செந்தேன் தளையவிழப் -
தாமரையில் உள்ளிருக்கும் தேன் , மொட்டு மலரும் போது, தன் தளைகளை அவிழ்த்து , விடுதலை பெற்று வெளி வருகிறது .
பூமடந்தை தன்னாட்டம் போலும்- திருமகள்/நிலமகள் கண்கள் போல் ஒளி பெற்று
தகைமைத்ததே- அத்தகைய தன்மையைத் தன்னிடத்தே கொண்டு,
சாகரம் - கடல்
சாகரஞ்சூழ் நன்னாட்டின் முன்னாட்டும் நாடு - கடல் சூழ்ந்த நல்ல நாடுகளுக்குள், முன்னோடியாய் உள்ள நாடு

இவையனைத்தும் தன்னகத்தே கொண்டு நிடத நாடு மிகச் சிறப்புடன் இருந்ததை இப்பாடல் மூலம் அறிகிறோம்.


Reference :

Nalavenba - Tamil VU

Nalavenba - Tamil VU - page 2

Nala Thamayanthi story

Nalan story sanskrit - Sri Harsha

Thirunallaru