Sunday, 13 December 2015

அன்னை ( பகுதி - 3 )

ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்த அன்னையே அவன்/அவளுக்கு தீங்கு நினைப்பதுண்டோ? இல்லை. அது மிக மிக அரிது. இருந்தாலும் அது அறியாமையால் செய்யும் பிழையாக இருக்கலாம்.
கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகி விடாது
இராமாயணத்தில் தசரதனின் வேள்விப்பயனாய்ப் பிறந்த நால்வருள் இராமன் கோசலைக்குப் பிறந்தவன் . பரதன் கைகேயிக்கு பிறந்தவன் . கைகேயி கூனியின் சூழ்ச்சியால், இளையவன் பரதன் நாடாளவும் , இராமன் கானகம் செல்லவும் தசரதனிடம் வரம் கேட்டுப் பெற்றாள். இராமனுக்கு இச்செய்தியை அவன் திருமுடி சூட்டும் விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன் தெரிவிக்கிறாள். இராமன் கைகேயியிடம் பின்வருமாறு கேட்பதாகக் கம்பர் விவரித்துள்ளார்.
கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம் - பாடல் 1600
‘எந்தையே ஏவ, நீரே
     உரைசெய இயைவது உண்டேல்,
உய்ந்தனென் அடியேன்; என்னின்
     பிறந்தவர் உளரோ? வாழி!
வந்தது, என் தவத்தின் ஆய
     வரு பயன்; மற்று ஒன்று உண்டோ?
தந்தையும், தாயும், நீரே;
     தலைநின்றேன்; பணிமின்’ என்றான்
அருஞ்சொற்பொருள்
எந்தை - என் + தந்தை , தசரதன்
நீர் - இங்கு கைகேயியைப் பார்த்து இராமன் பேசுவதால் கைகேயியை குறிக்கும்
இயைவது - ஒப்புக் கொள்வது
பணிமின் - கட்டளையிடுங்கள்
விளக்கம்
என் தந்தை தசரதன் கட்டளையிட, அதை என்னிடம் கூற நீங்களே ஒப்புக்கொண்டு என்னை அழைத்தீர்கள். ஆதலால் நான் உயர்ந்தவன் ஆனேன். என்னைக் காட்டிலும் இந்த சிறப்பைப் பெற பிறந்தவர்கள் எவரேனும் உண்டோ? இல்லை. நான் முன் செய்த தவத்தின் பயன் வந்துவிட்டது. இதை விடச் சிறந்தாக இனிமேல் வரக்கூடிய பயன் ஒன்றும் இல்லை. எனக்கு நன்மையைச் செய்யும் தந்தையும் தாயும் நீங்கள் தான் . கட்டளையிடுங்கள் . நீங்கள் சொல்வதைத் தலைமேற்கொண்டு செய்யக் காத்திருக்கிறேன் என்று இராமன் கூறினான்.
இத்துடன் கம்பர் நிறுத்திவிடவில்லை. அந்தக் கட்டளையை இராமன் கேட்ட பிறகு , அவன் முகம் எப்படி ஆயிற்று என்றால் அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல் புதிதாய் தெளிவாய் இருந்ததாம். அதையும் வென்றுவிட்டது என்றே கூறுகிறார். அதைக் கேட்பதற்கு முன்பும் பின்பும் ஒரே போல் அவன் முகம் இருந்தது.  கைகேயியின் வரம்  நமக்கு கல்நெஞ்சத்தின் கட்டளை போல் இருந்தாலும் இராமன் அதைத் தன் தாய், தந்தை இருவரது அருளும் கொண்ட கைகேயியின் அருள் வாக்காக எண்ணினான். அதுவே தன் தவப்பயன் என்றும் உணர்ந்து முன்னை விடவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கானகம் செல்ல ஆயத்தமானான்.
" மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே " என்று கோசலைக்குத் தான் பிறக்கும் போது புகழ் தேடித் தந்தவன், கானகம் செல்லும் கட்டளையை அறிந்த பின், கைகேயிக்கும் புகழாரம் சூட்டுகிறான். இராமன் தன் தாய் , தந்தை மீது கொண்ட பணிவும் அன்பும் நம்மை வியக்க வைக்கின்றன.
கைகேயி கல் நெஞ்சம் படைத்தவள் போல இருந்தாலும், இராமர் ஒரு வண்ணான் சொல்லுக்காக சீதையை அக்னிக்குள் இறங்குமாறு பணிப்பதும் இராமாயணத்தில் தீவினைகள் போல் தோன்றினாலும் இவற்றின் பின்னணியில் இருக்கும் நல்வினையை உணர்ந்து, தெரிந்தே இவை நடந்தன என்று அபூர்வ இராமாயணம் சொல்கிறது.

Ref


அன்னை ( பகுதி - 2 )

என்னைக் கவரந்த தமிழ்த்துறவிகளில் முதன்மையானவர் பட்டினத்தார். இவர் பாடல்களும் இவருடைய வரலாறும் தத்துவங்களும் மிகவும் சுவையானது. இவருக்கென்றே ஒரு தொடர் எழுத நான் விழைந்தாலும் தற்போதைக்கு இவர் அன்னையின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடலை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
கைப்பொருளும் மெய்ப்பொருளும் நிரம்பிய குடும்பம் அவருடையது. " தெளிவே வடிவாம் சிவஞானம் " என்று பாரதி பாடிய சிவஞானம் சிந்தையில் உரைத்தபோது துறவறம் பூண முடிவெடுத்தார். அதற்கு முன் அன்னையிடம் ஆசி பெறச் சென்றார். பட்டினத்தாரின் அன்னை பெயர் ஞானகலை. அவர் பட்டினத்தாரின் இடுப்பில் ஒரு துணிப்பையைக் கட்டினார். அது அவிழும் போது அவர் தன்னைக் காண வரவேண்டும் என்றும் அதுவே அவளின் இறுதிக்காலம் என்றும் கூறினாள். காலங்கள் சென்றன. அவரும் துறவியாய் வாழ்ந்து சிவநெறி வளர்த்து வந்தார். ஒருநாள் அவர் திருவிடைமருதூரில் இருந்த போது, அந்தப் பையின் முடிச்சு அவிழ்ந்தது. தன் தாயைப் பார்க்க விரைந்தார். அவர் வரும் வரை அவள் உயிர் காத்திருந்தது. அவர் கைகளிலேயே உயிரிழந்தாள். அன்னையின் பிரிவை ஆற்ற இயலாது துடித்தார். அவள் உடல் விறகிலிட்டால் துன்புறுமோ என்று உருகி, வாழைமட்டைகளை அடுக்கி , அதன் மேல் இட்டார். கீழ்வரும் பாடலைப் பாடினார். அவை தீ பற்றி எரிந்தன.
முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையிலே
அன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூள்க மூள்கவே
அருஞ்சொற்பொருள்  :
முன்னை - முன் புறம் , நெற்றிக்கண்
முப்புரம் - மூன்று மலைகள் . அசுரர்கள் மூவர் பொன்,வெள்ளி, இரும்பு ஆகிய மலைகள் அமைத்து அனைவரையும் துன்புறுத்தினர். அவற்றைச் சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணால் எரித்தார்.
பின்னை - பின் புறம், வால் பகுதி
அனுமன் இலங்கையில் தன் வாலால் தீ வைத்தான்
அன்னை தன்னைக் கருவில் தாங்கிய வெப்பம் - அடிவயிற்றுத்தீ
யானுமிட்ட தீ - அவர் இறுதியாக தாயின் உடலுக்கு வைக்க வேண்டிய தீ
மூள் - தீ எழும்புவது
விளக்கம் :
முப்புரங்களை முன் இருந்த நெற்றிக்கண் தீயால் சிவன் எரித்தான். இலங்கையை பின் இருந்த வாலின் தீயால் அனுமன் அழித்தான். அவ்வரிசையில் என் அன்னையோ அடிவயிற்றிலே உள்ள தீ கொண்டு என்னைத் தாங்கினாள். இறுதியாக நானும் இட்ட தீ இதுதான் என்று பொருள் தருகிறது. மூள்க என்று தீயிற்கே கட்டளை இடுகிறார்.
தன் தாயின் அடிவயிற்றின் வலியை, தன்னை ஈன்று வளர்த்த இறைவியை அந்நிலையில் அவரால் காண இயலவில்லை. அவர் பாடல் அக்னி பகவானையே சுட்டுவிட்டது போலும். அப்பிரிவை அம்மட்டைகளாலும் தாங்க இயலவில்லை. நாம் ஏன் இன்னும் இருக்க வேண்டும் என்று அவை எண்ணின என்று தோன்றுகிறது.  அவ்வாழை மட்டைகள் பற்றி எரிந்தன.

Ref : 



Saturday, 12 December 2015

அன்னை ( பகுதி - 1 )

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்கிறது கொன்றை வேந்தன். ஒரு தாயின் சிறப்பைப் போற்ற, எவ்வளவு பாடல்கள் இயற்றினாலும் , புகழுரை தந்தாலும் எதுவும் போதாது. அவள் தன் குழந்தையைப் பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, வேறு எதிலும் இல்லை. அவர்கள் எவ்வளவு வயதானாலும் தன் அன்னைக்கு குழந்தைகள் தாம். அவள் தன்னலம் கருதாது தன் எல்லா சக்தியும் கொண்டு அக்குழந்தையை மிகச் சிறப்பாக வளர்க்க என்ன பாடு படுகிறாள் ? வள்ளுவர் ஒரு தாயின் மகிழ்ச்சி , அவள் குழந்தையைப் பெற்ற தருணத்தைவிட அவன் சான்றோன் எனப் பலரால் பாராட்டப்படும்போதுதான் பல மடங்காகிறது என்றார்.

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
"
- குறள் 69

அன்னையின் சிறப்பை, உயர்வை விளக்கும் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஏராளம் உள்ளன. அவற்றில் என்னை வியக்க வைத்த பாடல்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். உலகில் எவ்வளவு பெரிய சாதனைகளை நாம் படைத்தாலும் , பலபேரிடம் வாழ்த்து, ஆசி பெற்றலாலும் பல பிரபலங்களுடன் புகைப்படம், கையெழுத்து பெற்றாலும் ( photo, autograph மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது ) நம் அம்மாவிடம் நாம் பெறும் அன்பும் ஆசியும் மகிழ்ச்சியும் உலகில் எங்கும் கிடைக்காது. "..தெய்வம் பூமிக்கு வருவதில்லை, தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்... " என்ற திரைப்பாடல் வரிகள் என் நினைவிற்கு வந்தன.

கீழ்வரும் பாடல் எந்த நூலில் உள்ளது, யார் இயற்றினார் என்ற விவரம் சரியாகத் தெரியவில்லை. நான் என் தாத்தாவிடம் கேட்டறிந்தவாறு இங்கே எழுதியுள்ளேன். இது நந்தி கலம்பகம் நூலில் இடம்பெற்றுள்ளதாகவும் , நந்தி வர்மன் தன் தாயின் மீது எழுதிய பாடல் என்றும் அவர் கூறிய நினைவு. ஒரு பழைய குறிப்பில், எழுதி வைத்திருந்தேன். அது மீண்டும் கிடைத்தால் இந்தப் பக்கத்தை update செய்கிறேன் . இப்பாடல் பற்றிய விவரம் நீங்கள் அறிந்தால் இங்கே பகிரவும்.

கருவூரில் இருந்த நாள் முதல் 
கண்ணடக்கி வாயடக்கி வயிற்றைக் கட்டி 
ஈரைந்து மாதங்கள் சுமந்துப் பெற்று, 
வட்ட நிலாச் சந்திரனைச் சுட்டிக்காட்டி, 
வடித்தெடுத்த நெய் சோற்றைப் பிசைந்து ஊட்டி, 
பொற்தொட்டிலில் இட்டு, சின்னஞ்சிறு தாலாட்டுப்பாட்டுப் பாடி, 
முலைக்குடத்தில் சுரந்து வந்த அமுதை ஊட்டி, 
பொட்டிட்டு, பூணுமிட்டு, பட்டாடை பல உடுத்தி அழகு பார்த்து , 
சிரித்தால் உடன் சேர்ந்து சிரித்திட்டு, 
அழுதால் உடல் நொந்து அழுது பின்னர், ....
என்னை வாழ்க வாழ்க என்று வையத்தில் வாழ வைத்த அன்பு நிறை அம்மா


அருஞ்சொற்பொருள் :
கண்ணடக்கி - கண் + அடக்கி
தூக்கம் தொலைந்து
வாயடக்கி வயிற்றைக் கட்டி- வாய்+ அடக்கி
உணவில் குழந்தைக்கு எது சேருமோ அதை மட்டும் உண்டு, தனக்கு பிடித்த உணவுகளை உண்ணாமல் வாயை அடக்கி
ஈரைந்து - இரண்டு x ஐந்து - ( 2 x 5 = 10 )
பத்து மாதங்கள் சுமந்து
பொற்தொட்டில் - பொன் + தொட்டில் .
பூண் - அரச மரபினர் மார்பில் அணியும் கவசம் போன்ற அணிகலன்
பூணுமிட்டு - பூணும் + இட்டு
பட்டாடை - பட்டு + ஆடை
தங்கத் தொட்டில், பூண், பட்டாடை போன்ற குறிப்புகளால் , இப்பாடலை இயற்றியவன் அரசனாகவே இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

விளக்கம் :

என்னை கருவில் இருந்த காலத்தில் இருந்தே கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து, எனக்காக உன் மகிழ்வைத் தொலைத்தவளே. என்னைப் பெற்று, சீராட்டி பால் ஊட்டி வளர்த்தவளே. தொட்டிலில் இட்டு, தாலாட்டி, தாய்ப்பால் கொடுத்து , நிலாவைக் காட்டி நெய் சோறு ஊட்டியவளே. எனக்குப் பொட்டு வைத்து, பூண் அணிவித்து பட்டாடை உடுத்தி அழகு பார்த்தாய். நான் அழுத போது நீயும் உடன் சேர்ந்து அழுது, நான் சிரித்த போது நீயும் சிரித்து என்னுடனேயே நீ இருப்பதை உறுதி செய்தாய். என்னை வாழ்க வாழ்க என்று இவ்வுலகில் வாழ்த்திய அன்னையே என்று ஏங்குகிறான். அவன் தாய் இறந்த போது அவளின் பிரிவால் இதை எழுதியிருக்கலாம்.

 Ref :

Aathichoodi

thirukkural - 69

poon - wiki


Friday, 11 December 2015

நீங்களும் வெல்லலாம் நாலு கோடி

இந்திய ரூபாயில் கோடி என்பது ஒரு கவர்ச்சியான தொகை. இன்றைய விலைவாசியில் , வீடு , வாகனம் என்பது பலருக்கும் கனவாகவே உள்ளது.  தங்கள் வருமானம், தொழில் தவிர ஏதேனும் ஒரு நேர்மையான வழியில் ஒரு தொகை கிடைத்தால் அதைச் சேமித்து, பெருக்கி இதைச் செய்யலாம் அதைச் செய்யலாம் என்று திட்டம் வகுப்போர் ஏராளம் .
பரிசு தரும் போட்டிகள் , பங்குச்சந்தை முதலீடுகள் இங்கே மிகப் பிரபலம். ஏன் இவ்வளவு போட்டி? வாழ்க்கைப் போராட்டம் ? கோடி என்பது கடினமான இலக்கமா ? அடையக்கூடிய இலக்கு இல்லையா ?ஆம். நேற்றல்ல இன்றல்ல மிகப் பழங்காலந்தொட்டே கோடி என்பது ஒரு அரிதான எண்ணிப் பார்க்க இயலாத எண்ணிக்கை தான்.
வியப்பாய் இருக்கிறதா? ஒருமுறை ஔவையார் ஒரு ஊரிற்குச் சென்றிருந்தார். அங்கு புலவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கவே காரணம் கேட்டறிந்தார். மறுநாள் விடிவதற்குள் நாலு கோடிப் பாடல்கள் இயற்ற வேண்டும் என்றும் இயலாவிட்டால் அவர்கள் தலையைக் கொய்துவிடுவதாகவும் அரசன் கட்டளையிட்டதைத் தெரிவித்தனர். இந்த அரசன் ஒரு கருமியாக இருந்திருக்க வேண்டும். தன் தவறு வெளிப்படாமல் இருக்க, தமிழ்ப் புலவர்கள் மீது இயலாமை என்ற பட்டம் சுமத்த இவ்வாறு கட்டளையிட்டிருக்க வேண்டும்.  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில் தமிழுக்கே சவாலா? தலைகுனிவா? ஒருக்காலும் இல்லை.

ஔவை சிந்தித்தார். நொடிப் பொழுதில் கீழ்க்கண்ட பாடலை இயற்றினார்.

"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"

"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்"

"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"

"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும் "

இப்பாடல் வரிகளில், ஒவ்வொரு வரி உணர்த்தும் பொருளும் ஒரு கோடிக்கு சமம். மொத்தம் நான்கு வரிகள் - நாலு கோடி ஆகும் . இதுவே நாலு கோடிப் பாடல்கள் என்று வழங்கப்படுகிறது.

அருஞ்சொற்பொருள் :

முற்றம் - வீட்டின் முன் பகுதி
உண் - சாப்பிடுதல்
உண்ணீர் - உண்ணுங்கள் என்று கூறுதல் . எ.கா. அனைவரும் வாரீர். ஈர் என்று முடிவது மரியாதைக்கான சொல்
மனை - வீடு
குடி - குடும்பம்
குடிப்பிறந்தார் - ஒரே குடும்பத்தில் பிறந்த மக்கள் . சகோதர சகோதரிகள்.
நா - நாக்கு
நாக்கோடாமை - சொன்ன சொல் தவறாமை நடுவுநிலைமை , பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவாய்ப் பேசுதல் , நீதியை எடுத்துரைத்தல் .
எ.கா. இராவணன் தன் அண்ணன் என்றாலும் அவன் தவறு செய்த போது விபீஷணன் நீதியை எடுத்துரைத்தான்.
வயது நிறைந்த முதியோர், சான்றோர், அறிஞர் பலர் மௌனம் காத்த போது, பாஞ்சாலிக்கு நடக்கும் அநீதியை எதிர்த்து விகர்ணனும்( துரியோதனனின் தம்பி ),விதுரரும் குரல் கொடுத்தனர். விதுரரே நீதிமான் ஆனார்.

விளக்கம் :

நம்மை மதிக்காதவர் வீட்டிற்குச் சென்று (அவர்கள் முற்றம் வரை கூட ,தவிர்க்க இயலாத சூழலிலும் சென்று ) கால் வைக்காமல் இருப்பது கோடி பெறும். நம்மை உண்ணுங்கள் உண்ணுங்கள் என்று மனமார நம் வயிறார நம்மை உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பெறும். கோடி ரூபாய் கொடுத்தாலும் சகோதர சகோதரிகளுடன் கூடி மகிழ்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது. கோடி கோடியாய் தந்தாலும், நீதி வழுவாத தன்மையும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதலும் பிறழாத நாக்கும் பெற்றிருப்பது கோடி பெறும்.
இத்தன்மைகள் கோடி கொடுத்தும் பெற முடியாத உயர் பண்புகளாகும் . இவற்றை  பின்பற்றினால் நாமும் நாலு கோடிக்கு அதிபதி ஆவோம்.

Ref  :

Thursday, 10 December 2015

காசு பெரிதில்லை காதல் பெரிதெனக்கு !!!

இன்றைய நவீன உலகில் , வீட்டிலும் , அலுவலகத்திலும் பல வித வேலைகளைப் பொறுப்புணர்வுடன் குறித்த நேரத்தில் செம்மையாய்ச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .

இதனை யிதனாலிவன்முடிக்கு மென்றாய்ந் ததனை யவன்கண் விடல்  - குறள் 517

இக்குறளுக்கு ஏற்ப நேர மேலாண்மை, குழுவாக வேலை செய்தல்,  வேலைகளை அவரவர் திறமைக்கேற்பப் பிரித்தளித்தல் ( time management, team work, delegation of tasks ) போன்றவை மிக இன்றியமையாததாகும்.   இது பற்றிய பயிற்சிகளும் , கருத்தரங்குகளும்,ஆளுமைத்திறன் வகுப்புகளும் நிறுவனங்களில் நடத்தப்படுகின்றன. ஓர் 100 ஆண்டுகளுக்கு முன் சிந்தித்தால் , ஆண்கள் பொருள் ஈட்டினர். பெண்கள், பெரியவர்கள் குடும்பத்தைப் பேணி காத்தனர். ஆனால் , இன்று பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே நேரத்தில், குடும்பத்தில் குழந்தைகள், பெரியவர்களை கவனித்தல், வீட்டிற்குத் தேவையானவற்றைச் செய்தல் போன்றவற்றில் அவர்களால் முழுமையாக ஈடுபட இயலவில்லை. இதற்காக அவர்கள் நம்பியிருப்பது வேலையாட்களைத்தான் .
நான் யாரையும் புண்படுத்தும் நோக்குடன் இதை எழுதவில்லை. ஒரு எடுத்துக்காட்டாகவே இதை எழுதுகிறேன் .

நம் வீடுகளில் வேலையாட்கள் இருக்கும் மகிழ்ச்சி ஒரு புறம் . அப்பாடா என்ற பெருமூச்சு. ஆனால் நாளடைவில் ,நம் புலம்பல்கள் அதிகமாகின்றன. ஊதியம் அதிகம் கேட்பார்கள். அவர்கள் நாம் பாத்திரங்கள் அதிகம் போட்டால் போட்டு உடைப்பார்கள் . நாம் ஒருவிதம் சொன்னால் அவர்கள் வேறு விதம் செய்வார்கள் . நம் வீட்டில் விருந்தினர் வரும் நேரத்தில் விடுப்பு எடுப்பார்கள் . காரணம் கேட்டால் பல பொய்கள் சொல்வர். நம் வீட்டில் நடக்கும் சண்டைகள் ஊடகங்களின் அவசியமின்றிப் பலரைச் சென்றடையும். நாம் அவர்கள் வேண்டாம் என்று நினைத்தாலும் , நம்மால் முழு பொறுப்பும் ஏற்க இயலவில்லை. தீபாவளி, பொங்கல் ஊக்கத்தொகை, உணவுப்பொருட்கள் ,உடைகள் என்று அவரவர் சக்திக்கு ஏற்ப எவ்வளவு செய்தாலும் , அதை அவர்கள் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. ஒரு பிரச்சனை உலகில் இருந்தால் , அதற்கான தீர்வும் இருக்க வேண்டுமல்லவா? தீர்வைப் பற்றி சிந்திக்கையில் , இது முதலில் எப்போது தொடங்கியது என்று எண்ணுவோம் . இது நம் காலத்தில் மட்டும் தானா .. இல்லை இல்லை. பாரதியார் காலத்திலும் இவை இருந்துள்ளன. பாரதியும் வேலையாட்களால் அவதிப்பட்டிருப்பார் போலும். அவர் கவி அல்லவா? தன் இன்னல்களைக் கவிதையாகவே எழுதியுள்ளார்.

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
‘ஏனடா,நீ நேற்றைக் கிங்குவர வில்லை’யென்றால்,
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்;ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;
சேவகரால் பட்ட சிரமமிக வுண்டு,கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ,செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்

இப்படி அவர் அல்லல் படுகையில், ஒருவன் வருகிறான் .

அல்லல் நீக்க வருகிறான் ஓர் வேலையாள்

எங்கிருந்தோ வந்தான்“இடைச் சாதி நான்”என்றான்;
“மாடுகன்று மேய்த்திடுவேன்,மக்களை நான் காத்திடுவேன்;
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே;
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும்,கள்ளர்பய மானாலும்,
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை,தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்;
கற்ற வித்தை யேதுமில்லை;காட்டு மனிதன்;ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன்;சற்றும் நயவஞ் சனைபுரியேன்”
என்று பல சொல்லி நின்றான்.

நான் இடையன் சாதி. ( அக்காலத்தில் வீட்டில் மாடுகள் வைத்திருந்தனர். அதைப் பார்க்கவும் ஆட்கள் தேவைப்பட்டனர். ) மாடு கன்றுகள் மேய்ப்பேன். வீட்டு வேலைகள் அனைத்தும் செய்வேன். சிரமத்தைப் பார்க்காமல் உங்களுக்கு எந்நேரமும் காவலாய் இருப்பேன். எனக்கு கோலடி, குத்துப்போர், மற்போர் தெரியும். உங்களைத் துளியும் ஏமாற்ற மாட்டேன் என்று சொன்னான்.

விவரம் கேட்டறிதல்

“ஏதுபெயர்? சொல்” என்றேன்
“ஒன் றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை” என்றான்
கட்டுறுதி யுள்ளவுடல் கண்ணிலே நல்லகுணம்,
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல்-ஈங்கிவற்றால்,
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,...

அவன் பெயரைக் கேட்கிறார். ஊரில் உள்ளவர்கள் கண்ணன் என்று அழைப்பார்கள் என்றான். உறுதியான உடல், பார்வையிலே நல்ல குணம், ஏற்கனவே பழகிய ஆள் போலவே ஒரு பேச்சு. இவன் தான் சரியான ஆள் என்று மனதில் மகிழ்ச்சியுடன் அடுத்த கட்டத்திற்குச் சென்றார்.

ஊதியம் கேட்டல்

“....மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு”கென்றேன்.“ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும்
ஆன வயதிற் களவில்லை;தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை;நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை“யென்றான்.

நன்றாகப் பேசுகிறாய். புகழுரையும் சொல்கிறாய். கூலி என்ன கேட்கிறாய் என்றார். எனக்கு மனைவி, குழந்தைகள் இல்லை. நான் ஒரு தனியாள் . நீங்கள் என்னை அன்புடன் ஆதரித்தால், அதுவே போதும் . காசெல்லாம் பெரிதில்லை.

கண்ணனை ஆட்கொண்ட பாரதி

பாரதியால் நம்ப முடியவில்லை. இவன் என்ன பைத்தியமா ? காசு வேண்டாம் என்கிறானே. எனினும் மகிழ்ச்சியுடன் இவன் தான் சரியான ஆள் என்று ஏற்றுக்கொண்டு விட்டார். பொதுவாக இறைவன் தன் அடியார்களை ஆட்கொண்டுவிட்டதாகப் படிக்கிறோம் . ஆனால் , பாரதியாருக்குப் பெருமிதம் தான் கண்ணனை ஆட்கொண்டேன் என்கிறார். அவர் கண்ணன் மீது பக்தியைத் தாண்டிய பேரன்பு வைத்திருந்தார்.

பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை
ஆளாகக் கொண்டுவிட்டேன்.அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக,நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்;கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெலாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல்,என்குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான்.வாய்முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான்;வீடுசுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெலாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி,வளர்ப்புத்தாய்,வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய் மந்திரியாய்,நல்லா சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான்,இடைச்சாதி யென்று சொன்னான்.
இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!

தன் மக்களைப் பெற்றதை விட, கண்ணனை சேவகனாய்ப் பெறவே தான் தவம் செய்துவிட்டதாகக் கூறுகிறார். ஒரு சேவகன் தாயாய் , அமைச்சனாய், ஆசானாய் விளங்குகிறான் என்றால் அவன் பண்பை என்னவென்று புகழ்வது ? அன்பு, அறிவு, அருள் .... எல்லாம் நிறைந்த மனிதர் உள்ளனரா ? இல்லை. ஆதலாலேயே பண்பிலே தெய்வமாய் என்று புகழ்கிறார்.

கண்ணனின் பேரருள் :

கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம்,இளமாண்பு,சீர்,சிறப்பு,நற்கீர்த்தி,
கல்வி,அறிவு,கவிதை,சிவயோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம்,என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!

கண்ணன் தன் வீட்டிற்கு வந்த நாளிலிருந்து, அனைத்து நலன்களும் பெற்று மகிழ்வதாக அவர் கூறுகிறார். இறைவனே சேவகனாய் வந்ததாகக் கூறும் பாரதியின் ஊக்கமும், மகிழ்ச்சியும், கண்ணன் மீது அவர் கொண்ட பற்றும் இதன் மூலம் விளங்குகிறது.

Ref :

Monday, 7 December 2015

மனித வாழ்வில்...( இறவாப்புகழ் - 5 )

இத்துடன், இந்த இறவாப்புகழ் தொடரை நிறைவு செய்கிறேன் . இது பற்றிய பாடல்கள், கதைகள் தமிழ் வரலாறு, இலக்கியங்கள் திரைப்படங்களிலும் கூட ஏராளம் உள்ளன. நான் இங்கு பகிர்ந்து கொண்டவை ஆயிரத்தில் ஒரு பங்கேயாகும்.
மனித வாழ்க்கை நிலையற்றது என்று உணர்ந்த அருள் பெரியோர்கள் , இறைவனை உணர்ந்தவர்கள் , பலர் தம் அனுபவங்கள் மற்றும் அறிவுரைகளைப் பாடல்கள் வாயிலாக விட்டுச் சென்றுள்ளனர். நீங்கள் சமயங்களை நம்பாதவராயினும் , அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மட்டுமே உலகைக் காண்பவர்களாயினும், அனைவருக்கும் இது பொதுவானதே. அறிவியல் வரலாறு போன்றவையும் புகழ் பெற்ற செய்திகளையே தம்மிடம் அதிகம் பெற்றுள்ளன.

"தோன்றின் புகழோடு தோன்றுக " என்று வள்ளுவர் கூறுவது போல் உலகில் எவ்வளவோ பேர் தோன்றி மறைகின்றனர் . இவர்களில் யாரை உலகம் நினைக்கிறது? அல்லது இவர்களில் எத்துணை பேர் உலகத்திற்குத் தன்னால் இயன்றவற்றை அளித்துச் சென்றுள்ளனர்? புகழுடன் இருப்போர் மட்டுமே உலகில் தோன்றியவர்களாகக் கருதப்படுகின்றனர் . மற்றவர்கள் இவ்வுலகில் பிறப்பதைவிட பிறவாமல் இருப்பது நல்லது என்கிறார் வள்ளுவர் .

இந்த பிறவியின் நோக்கத்தை உணர்ந்த மனிதர்கள் இருவகை.

முதல் வகை :


இறைவனின் அருளமுதைப் பெற , உலகத்தில் பிற உயிர்களுக்குத் தன்னால் இயன்றதைச் செய்ய மீண்டும் ஒரு பிறவி எடுக்க மாட்டோமா என்று ஏங்கும் ஒரு சாரார் .

"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது " - ஒளவையார்

பிறவியே அரியது. அதிலும் ஆறறிவுள்ள மனிதனாகப் பிறத்தல் அரிது என்றார் ஔவையார்.

"வல்லமை தாராயோ
இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவ சக்தி நிலச்சுமையென
வாழ்ந்திடப் புரிகுவையோ? " - பாரதியார்

சிவசக்தி, நிலத்திற்கு ஒரு சுமையாய் என்னை வைத்து விடாதே. இந்த மனித உலகம் முழுமைக்கும் பயன் உள்ளவனாய் இருக்க வல்லமை கொடு என்கிறார்.

" திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆனேனே " - குலசேகராழ்வார்

இறைவனின் திருமேனியாகவே கருதப்படும் திருவேங்கட மலையில் (திருப்பதி - திருமலா), அந்தச் சுனையில் மீனாய்ப் பிறவி வேண்டுகிறார் குலசேகராழ்வார்.

" மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே " - திருநாவுக்கரசர் (அப்பர்)

சிவபெருமானின் அழகையும், திருவருளையும் அப்பர் காணப்பெற்றதால், இதற்காகவே மனிதப்பிறவி வேண்டும் என்கிறார்.

இரண்டாம் வகை :

போதும் இப்பிறவியில் அனுபவித்தவை. இனி ஓர் பிறவி வேண்டாம். இந்தப் பிறவிக் கடலை நீந்திக் கரை சேர்ந்தால் போதும் என்று மற்றொரு சாரார் .

" .. நானிலத்தில் பல பிறவி எடுத்துத் திண்டாடினது போதாதா .. "

" பிறவா வரம் தாரும் பெம்மானே"

- பாபநாசம் சிவன்
இந்த பிறவி போதும் போதும் என்று தவிக்கிறார் பாபநாசம் சிவன் . அதை இப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

"அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே" - அபிராமி பட்டர்

அபிராமி அந்தாதி பாடல் 22

நான் இறந்து விட வேண்டும். இங்கு இனி பிறக்கக் கூடாது என்று அபிராமியிடம் வேண்டுகிறார்.

"....நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்..." - சிவ வாக்கியர்

எமன் வந்து அழைக்கும் போது நாறும் இவ்வுடல் என்று அதன் நிலையற்ற தன்மையை உணர்த்துகிறார்.

ஒருவர் உயிருடன் இருக்கும் வரை அவரைப் பெயர் சொல்லி அழைப்போம் . அவர் இறந்த பிறகு , அவர் உடலுக்குப் பெயர் நீங்கிவிடுகிறது.
"அவர் இருக்காரா? எப்ப வருவார் ? " என்று அதுவரை கேட்டவர்கள் இறந்த பின் ,"body எப்ப எடுக்றாங்க ? body எப்ப சொந்த ஊருக்குக் கொண்டு வராங்க ? " என்று தான் கேட்பார்கள் . திருமூலர் இதை மிக அழகாகப் பாடியிருக்கிறார் .

நூல் : திருமந்திரம் , பாடல் : 145

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே


ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் - ஊர் கூடி ஒப்பாரியிட்டு சத்தமாக அழுவது
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் - இறந்தவரின் உடலைச் சுட்ட "உடல்" என்ற சொல்லே பயன்படுகிறது. ஆதலால் ,அவர் பெயர் நீங்கி விட்டது.
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு - இறந்தவர் உடலைச் சுடுகாட்டில் எறித்து விட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே - அதன் பிறகு வீட்டிற்கு வந்து குளிப்பது மற்றும் பிற வழக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றுடன் , இறந்தவர்களின் நினைவையும் மக்கள் மறந்துவிடுகின்றனர் .
இறந்தவரின் பெயர் நீங்கி அவரின் நினைவுகளும் நீங்கிவிடுகிறது. இதுவே இறந்தவரின் நிலை என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த முன்னோர் வழி சிந்தித்தால் நம் பிறவியின் அருமை தெரிய வரும். இது வரை நாம் கடந்து வந்த பாதைகள் வழி தவறினாலும் இறைவன் அளித்த இவ்வாழ்வை இனி , இனிதுடையது ஆக்குவோம். புதியதோர் உலகம் செய்வோம்.   










Sunday, 6 December 2015

நந்திவர்மன் ( இறவாப்புகழ் - 4 )

" நான் உனக்காக உயிரையே கேட்டாலும் தருவேன் " என்று திரைப்படங்களில் கேட்டிருப்போம் . ஆனால் , உண்மையாக அவ்வாறு உண்டா ? என்று கேட்டால் உண்டு என்று தான் தமிழ் இலக்கியங்கள் சொல்கின்றன. இயற்கைப் பேரிடரில் உயிரிழப்போர்கள் உண்டு. ஆனால் இயற்கையே அவன் வாழ்வை அவன் கையில் அளித்த போதும் , தேவையில்லை என்று மறுத்துவிட்டான் நந்திவர்மன். ஏன் ? உயிரை விட மேலான ஒன்றுக்காக .. என்ன அது?

மூன்றாம் நந்திவர்மன் என்பவன் ஒரு பல்லவ அரசன். இவன் தன் உயிர் விட்ட கதையை நந்தி கலம்பகம் என்ற நூல் மூலம் அறிகிறோம். கலம்பகம் என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கலப்பு + அகம் - அதாவது பல்வகையான செய்யுட்களைக் கலந்து தன்னகத்தே கொண்டுள்ளதால் இப்பெயர். பல்வகையான பூக்களைக் கொண்ட மாலை கதம்பம் எனப்படும் . அதுவே திரிந்து கலம்பகம் என்றானது என்று கூறுவாரும் உண்டு. மற்றொரு பொருள் : கலம் - 12 , பகம் - அதில் பாதி -6 = 12 + 6 = 18, 18 உறுப்புகளைக் கொண்ட இலக்கிய வகை. இந்தக் கலம்பக நூல்களில் , காலத்தால் முதன்மையானது நந்தி கலம்பகம் ஆகும் . இது பல்லவ மன்னன் 3ஆம் நந்தி வர்மன் மேல் இயற்றப்பட்டது.

இந்நூலின் பின்னணியில் பல கதைகள் இருந்தாலும், நான் பின்வரும் கதையே சரியாக இருக்கக்கூடும் என்று கருதுகிறேன் . என் தாத்தா என்னிடம் கூறியதும் இதுவேயாகும்.
நந்திவர்மனின் மாற்றாந்தாய்க்கு 4 புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் நந்தி வர்மனை தோற்கடிக்கப் பல வழிகளில் முயன்றும் முடியவில்லை. அவர்களுள் ஒருவர் புலவர் . அவர் பெயர் காடவர் என்றிருக்கலாம் என்று கருதுகின்றனர். அவர் அறம் வைத்துப் பாடுவதில் வல்லவர். அறம் வைத்துப்பாடுதல் என்பது ஒருவரைப் புகழ்வது போல் வெளிப்படையாகத் தோன்றினாலும் , அவரை இகழ்ந்து அவர்களை எதிரியாய் நினைப்பவர்கள் வசை பாடுவது திட்டுவது போல் இருக்கும். அவர் அழிய வேண்டும் என்பதே பாடலின் நோக்கம். அறம் பாடுதல், அறம் வைத்துப் பாடுதல், வசை பாடுதல் எனப் பல்வேறு பெயர்களில் இது வழங்கப்படுகிறது.


இப்புலவர் நந்தி வர்மன் மேல் நந்தி கலம்பகம் இயற்றினார் . அவர் ஒரு கணிகையுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவளிடம் இப்பாடல்களை சொல்லிக்கொண்டிருப்பார். அவளும் இதைப் பாடிக்கொண்டிருந்தாள். அவர் பின்னாளில், மனம் திருந்தி துறவறம் பூண்டார். ஒருநாள் அந்தப் பெண் நந்திக் கலம்பகப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தாள். அதைத் தற்செயலாகக் கேட்ட காவலர்கள் அதில் தம் மன்னர் பெயர் இருக்கவே, மன்னரிடம் தெரிவித்தனர். உடனே அரசன், அப்பெண்ணை அழைத்து விவரம் அறிந்தான் . அதைப் பாடிய புலவரை வரவழைத்தான். இப்பாடல்களில் இருக்கும் தமிழ் அமுதை முழுவதுமாகக் கேட்க விரும்பினான். ஆனால் , புலவர் உண்மையைக் கூறி இப்பாடல்களை நீங்கள் கேட்டால் உயிரிழப்பீர்கள் நான் அவற்றை முழுமையாக இயற்றவில்லை. வேறு ஒருவருக்கு விற்று விட்டேன் என்றான் . அரசன் அதனால் பரவாயில்லை நான் கேட்க விரும்புகிறேன் என்று கட்டளையிட்டான். புலவர் எவ்வளவோ மறுத்தும் நந்தி வர்மன் விடவில்லை. பின்னர் புலவர் கூறியவாறே ,சில ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பந்தல்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பந்தல் எரிந்தது. இறுதியாக, கீழ் வரும் பாடலை , நந்தி வர்மன் ஒரு பந்தலின் கீழ், விறகுகள் அடுக்கப்பட்டு ( ஈமச் சடங்கு போல் ) அதன் மேல் அமர்ந்து கேட்டான். பாடல் முடிவில் விறகுகள் தீப்பற்றி எரிந்தன. நந்தி வர்மன் உடல் எரிந்து சாம்பலானது.


இதன் பாடல் எண் 100 அல்லது தனிப்பாடல் 21 என்று இருக்கக்கூடும் . இது இணையத்தின் செய்தி.

"வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே!"


அருஞ்சொற்பொருள் :

வானுறு - வான் + உறு
மதி - நிலவு
வானில் இருக்கும் நிலா
வதனம் - முகம்
மறிகடல் - பொங்கும் அலைகள் கொண்ட கடல்
கானுறு - கான் + உறு
கான் - காடு
கானுறு புலி - காட்டில் வாழும் புலி
கற்பகம் - வேண்டுபவற்றைத் தரும் மரம்
தேனுறு - தேன் + உறு
தேனுறு மலராள் - தேனை உடைய தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் திருமகள் - லக்ஷ்மி
அரி - திருமால், ஹ (ha) ரி என்ற வடசொல்லில் ஹ திரிந்து 'அ' என்றானது.
தேகம் - உடல் , செந்தழல் - தீ

விளக்கம் :

ஒருபொருள் :


நந்திவர்ம மன்னனே, நிலா மட்டுமே உன் முகம் போல் ஒளி வீசக்கூடியது. மற்றவை எல்லாம் வீண் . கடல் மிக ஆழமானது. அது வரை , உன் புகழ் பரவியுள்ளது. உன் வீரம் காட்டிலுள்ள புலி முதற்கொண்டு அறியும். புலிக்கு மட்டுமே உன் வீரம் உண்டு. கற்பக மரம் போல் ஆனது உன் கைகள். உன் கொடைத்தன்மை கற்பக மரத்திற்கு மட்டுமே உண்டு. திருமகளை விடவும் உன் செல்வம் இங்கு அதிகம் இருப்பதால், அவள் தன் இருப்பிடத்திற்கே சென்றுவிட்டாள். செந்தழல் போல் உன் உடல் ஒளிர்கிறது ( தேஜஸ் ) .

இப்படி உன் வீரம், புகழ், கொடை, செல்வம் என அனைத்தும் ஒப்புவமையற்றுத் திகழ்கின்றன. இவையே எங்கும் பரவி நிற்கின்றன. இதில் , நானும் என் விதியும் எங்கு செல்வது ? எங்களுக்கு ஏது இடம் என்று புகழ்வது போல் உள்ளது. இங்கு மன்னனின் ஒவ்வொரு பண்புக்கும் அதற்கான உவமை கூறப்பட்டுள்ளது. அதற்கான உவமேயம் ( உவமிக்கப்படும் பொருள்) என்று எண்ணும் போது,அதற்குத் தகுதி பெறுபவன் உலகில் நந்தி வர்மன் ஒருவனே ஆவான் என்பது போல் அமைந்துள்ளது. சான்றாக, கொடைத்தன்மைக்கே உரியது கற்பக மரம் . அதைத் தவிர வேறு என்ன கூற முடியும் என்றால் நந்தி வர்மனின் கைகளாம் . கற்பக மரத்தை விடுத்து, இவன் கைகளை கொடைக்கு உவமையாக்கிவிட்டார்.

மற்றொரு பொருள் :

ஒருவர் இறந்தால் , அவர் இறைவன் அடி சேர்ந்தார் என்று கூறுகிறோம் . இங்கு மன்னனும் அவனுக்கு உரியவையும் எங்கு சேர்கின்றன என்று புலவர் கூறுகிறார்.

நந்திவர்ம மன்னனே , உன் முகம் நிலவை அடைந்து விட்டது ( நந்தி இவ்வுலகில் இல்லை - உயிருடன் இல்லை) . உன் புகழ் கடலுக்குள் சென்றுவிட்டது ( உன் புகழ் ஆழ்கடலில் மூழ்கி அழிந்து விட்டது ) . உன் வீரம் புலியை அடைந்தது. கொடை அளித்த உன் கைகள் கற்பக மரத்தை அடைந்தது. இதுவரை உன்னுடன் இருந்த செல்வம் , அதன் வடிவாய் உன் நாட்டில் இருந்த திருமகள் அதை விட்டு நீங்கி அரியிடம் சென்றாள் . உன் உடல் தீயை அடைந்தது. இப்படி அனைத்தையும் இழந்து, உன்னையும் இழந்த பின் நானும் என் விதியும் எங்கு செல்வது என்று நந்திவர்மனைப்பார்த்து புலவர் கேட்பது போல உள்ளது.

இது நடக்கும் என்று அறிந்தே, தன் உயிரினும் மேலான தமிழைக் கேட்டு இன்புறவே உயிர் நீத்தான். தமிழின் உயிர்மெய்க்கு தன் உயிர்மெய் தந்தவன் இவன் தானோ!! என்ன பேறு பெற்றாய் தமிழே!!

நந்திவர்மனும் சொல்லாற்றலும்

இங்கு சொற்களின் ஆற்றலை கவனித்தால், ஒரு உண்மை புரியும் . "இனிய உளவாக இன்னாத கூறல்" என்ற வள்ளுவர் வாக்கும்,"யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே" என்ற திருமூலர் வாக்கும் வெறும் மேற்கோள்கள் அல்ல. அவை முற்றிலும் உண்மை. தீய சொற்கள் தீயவற்றைத் தருகிறது என்றால் நற்சொல் நல்லவற்றையே தரவேண்டும். இதற்கு செல்வத்துள் தலையாய செவிச்செல்வம் விரும்பிய நந்திவர்மனே சான்றாவான். இதில் வியக்க வைக்கும் வரலாற்றுச் செய்தி பல்லவ அரசர்கள் தமிழ்நாட்டில் தோன்றியவர்கள் அல்லர். அவர்களின் தாய் மொழி தமிழன்று.


Ref :

Kalambagam - Wiki
NandiKalambagam - Wiki
interestingtamilpoems - blog
Thinnai.com
solvanam.com
valaitamil.com
vaanvaasi - blogspot
poornachandran.com
aram paaduthal - Wiki
Nandivarman III - Wiki

Tuesday, 1 December 2015

பிசிராந்தையார் ( இறவாப்புகழ் - 3 )

பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு
கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரை ஒருவர் காணாமலேயே நட்பு பூண்டிருந்தனர்.
ஆந்தையார் என்பது அப்புலவரின் பெயர் . அவர் பாண்டிய நாட்டில் "பிசிர்" என்ற ஊரில் , வாழ்ந்தார் . ஆதலால் "பிசிராந்தையார்" என்றழைக்கப்பட்டார் . சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் உறையூரைத் தலைநகராய்க் கொண்டு ஆட்சி புரிந்தான் . இருவரும் தொலைவில் உள்ளதால், ஒருவரை ஒருவர் காண இயலவில்லை. என்று காண்போம் என்று அந்நாளை நோக்கிக் காத்திருந்தனர் . ஆனால் விதி வேறு விதமாய் இருந்தது. ஓர் கறுப்பு நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
கோப்பெருஞ்சோழனின் இருபுதல்வர்களும் , ஆட்சியைப் பெறச் சண்டையிட்டனர் . இந்த உட்பூசல்களினாலும் பல்வேறு மனக்கசப்புகளாலும் ஆட்சியைத் துறந்து வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான் . அவ்வாறு செல்கையில் , தான் வடக்குத் திசையில் உண்ணாநோன்பிருக்கும் இடத்திற்கு அருகிலேயே மற்றொரு ஆசனம் அமைக்கச் சொன்னான் . " என்னைத் தேடி நிச்சயம் பிசிராந்தையார் வருவார். அவரை இவ்விடத்திற்கு அழைத்து வாருங்கள் " என்று சொல்லிப் புறப்பட்டான் .
அவன் வடக்கிருப்பதைக் கேள்வியுற்றப் பிசிராந்தையார் அவனைத் தேடி வந்தார் . ஆனால் அதற்குள், சோழனின் உயிர் பிரிந்துவிட்டது. அவரைக் கண்ட சோழனின் மகன் , " தாங்கள் வருவீர்கள் என்று தந்தை கூறினார். அவர் நண்பர் என்பதால், தாங்கள் முதியவராக இருப்பீர்கள் என்று எண்ணினேன். ஆனால் தாங்கள் இளமையாகக் காட்சி அளிக்கிறீர்களே ! " என்று கூறினான். அதற்கு அவர் அளித்த விடையை இன்னொரு பதிவில் (in  another post ) விரிவாகச் சொல்கிறேன் . பின்னர், பிசிராந்தையாரை அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றனர். தன் ஆருயிர் நண்பன் விட்டுச்சென்ற இடத்தில் தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார். "நீ இல்லாத உலகத்திலே" என்ற கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வருகிறது. அவரும் அவ்வாறே எண்ணினார் போலும்.
உயிர் நண்பர்கள் இருவர் இவ்வாறு தொலைவில் இருந்து காணாமல், இறுதியில் பிரிவால் ஒன்று சேர்ந்தனர் என்று இந்நிலையை எண்ணி பிசிராந்தையார் இறக்கும் போது ஒரு புலவர் பின்வரும் பாடலை இயற்றினார் .
பாடல் இடம்பெற்ற நூல் : புறநானூறு
பாடல் எண் : 218
இயற்றியவர் பெயர் :  கண்ணகனார்
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மா மலை பயந்த காமரு மணியும்
இடை படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
அரு விலை நன் கலம் அமைக்கும் காலை
ஒரு வழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
அருஞ்சொற்பொருள்
பொன் - தங்கம்
துகிர் - பவளம்
மன்னிய மாமலை - இடம்பெயராத நிலையான பெரிய மலை
பயந்த - தந்த
காமருமணி - காமர் + மணி
விரும்பத்தக்க மாணிக்கம்
மலைகள் தரக்கூடிய மாணிக்கம்
சேய - தொலைவில்
இடை படச் சேய ஆயினும் - ஒவ்வொரு பொருளும் தோன்றும் இடங்கள் தொலைவில் இருந்தாலும்
தொடை - விரைவாக , தொடுத்தல்
புணர்ந்து - சேர்ந்து
அருவிலை - விலைமதிப்பற்ற (அருமையான)
நன்கலம் - நல்ல ஆபரணம்
அமைக்கும் காலை - அமைக்கும் போது
தோன்றியாங்கு - தோன்றி + ஆங்கு ( அங்கே )
ஒரு வழித்தோனறியாங்கு என்றும் - ஒரே வழியில் அங்கே தோன்றியவை போல
சான்றோர்
சான்றோர் பாலர் ஆப - சான்றோர் மற்ற சான்றோர் வழியே செல்வர் , அவர்கள் துணையே விரும்புவர் , அவர்கள் பக்கமே செல்வர்.
சாலார் - சான்றோரின் எதிர்ப்பதம் . பண்புகள் இல்லாத கீழ்மக்கள்
சாலார் சாலார் பாலர் ஆகுபவே - கீழ் மக்கள் கீழ் மக்களையே சேறுவர்
விளக்கம்
மண்ணிலிருந்து கிடைக்கும் விலையுயர்ந்த தங்கம் , பவளம், கடலிலிருந்து கிடைக்கும் முத்து, மலையிலிருந்து கிடைக்கும் மாணிக்கம் போன்றவை வெவ்வேறு இடங்களில் தோன்றினாலும் அவற்றைக் கோர்த்து மாலையாகச் செய்யும் போது அது இன்னும் ஒப்பற்றதாகிறது. அதன் ஒப்பற்ற தன்மை மூலம் , அவை ஒரே இனத்தில்/இடத்தில் தோன்றியது போல் வேறுபாடின்றிக் காட்சியளிக்கிறது. அதே போல் சான்றோர்கள் ( இங்கு கூறப்படுவது பிசிராந்தையைர் மற்றும் கோப்பெருஞ்சோழன் ) வெவ்வேறு இடங்களில் தோன்றினாலும் " இனம் இனத்தோடு சேரும் " என்பது போல அவர்கள் பிற சான்றோர்களோடு இணைவதையே விரும்புவர். கீழ்மக்கள் கீழ்மக்களையே சேர்வர்.
இங்கு, சான்றோர் உயிரையே விட்டாவது இணைய விரும்புவர் என்பது மறைபொருள். இத்தகைய சான்றோரின் இணைப்பையே ஔவையும் மூதுரையில் , "கற்றாரைக் கற்றாரே காமுறுவர் " என்று பாடினார் . இவர்களின் நட்பையா, உயர் பண்பையா இறந்து பெற்ற இறவாப்புகழையா , இவர்களை இணைபிரியாமல் வைத்த தமிழையா எதை நாம் வியப்பது என்று புரியவில்லை.

Ref :