Friday, 11 December 2015

நீங்களும் வெல்லலாம் நாலு கோடி

இந்திய ரூபாயில் கோடி என்பது ஒரு கவர்ச்சியான தொகை. இன்றைய விலைவாசியில் , வீடு , வாகனம் என்பது பலருக்கும் கனவாகவே உள்ளது.  தங்கள் வருமானம், தொழில் தவிர ஏதேனும் ஒரு நேர்மையான வழியில் ஒரு தொகை கிடைத்தால் அதைச் சேமித்து, பெருக்கி இதைச் செய்யலாம் அதைச் செய்யலாம் என்று திட்டம் வகுப்போர் ஏராளம் .
பரிசு தரும் போட்டிகள் , பங்குச்சந்தை முதலீடுகள் இங்கே மிகப் பிரபலம். ஏன் இவ்வளவு போட்டி? வாழ்க்கைப் போராட்டம் ? கோடி என்பது கடினமான இலக்கமா ? அடையக்கூடிய இலக்கு இல்லையா ?ஆம். நேற்றல்ல இன்றல்ல மிகப் பழங்காலந்தொட்டே கோடி என்பது ஒரு அரிதான எண்ணிப் பார்க்க இயலாத எண்ணிக்கை தான்.
வியப்பாய் இருக்கிறதா? ஒருமுறை ஔவையார் ஒரு ஊரிற்குச் சென்றிருந்தார். அங்கு புலவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கவே காரணம் கேட்டறிந்தார். மறுநாள் விடிவதற்குள் நாலு கோடிப் பாடல்கள் இயற்ற வேண்டும் என்றும் இயலாவிட்டால் அவர்கள் தலையைக் கொய்துவிடுவதாகவும் அரசன் கட்டளையிட்டதைத் தெரிவித்தனர். இந்த அரசன் ஒரு கருமியாக இருந்திருக்க வேண்டும். தன் தவறு வெளிப்படாமல் இருக்க, தமிழ்ப் புலவர்கள் மீது இயலாமை என்ற பட்டம் சுமத்த இவ்வாறு கட்டளையிட்டிருக்க வேண்டும்.  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில் தமிழுக்கே சவாலா? தலைகுனிவா? ஒருக்காலும் இல்லை.

ஔவை சிந்தித்தார். நொடிப் பொழுதில் கீழ்க்கண்ட பாடலை இயற்றினார்.

"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"

"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்"

"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"

"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும் "

இப்பாடல் வரிகளில், ஒவ்வொரு வரி உணர்த்தும் பொருளும் ஒரு கோடிக்கு சமம். மொத்தம் நான்கு வரிகள் - நாலு கோடி ஆகும் . இதுவே நாலு கோடிப் பாடல்கள் என்று வழங்கப்படுகிறது.

அருஞ்சொற்பொருள் :

முற்றம் - வீட்டின் முன் பகுதி
உண் - சாப்பிடுதல்
உண்ணீர் - உண்ணுங்கள் என்று கூறுதல் . எ.கா. அனைவரும் வாரீர். ஈர் என்று முடிவது மரியாதைக்கான சொல்
மனை - வீடு
குடி - குடும்பம்
குடிப்பிறந்தார் - ஒரே குடும்பத்தில் பிறந்த மக்கள் . சகோதர சகோதரிகள்.
நா - நாக்கு
நாக்கோடாமை - சொன்ன சொல் தவறாமை நடுவுநிலைமை , பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவாய்ப் பேசுதல் , நீதியை எடுத்துரைத்தல் .
எ.கா. இராவணன் தன் அண்ணன் என்றாலும் அவன் தவறு செய்த போது விபீஷணன் நீதியை எடுத்துரைத்தான்.
வயது நிறைந்த முதியோர், சான்றோர், அறிஞர் பலர் மௌனம் காத்த போது, பாஞ்சாலிக்கு நடக்கும் அநீதியை எதிர்த்து விகர்ணனும்( துரியோதனனின் தம்பி ),விதுரரும் குரல் கொடுத்தனர். விதுரரே நீதிமான் ஆனார்.

விளக்கம் :

நம்மை மதிக்காதவர் வீட்டிற்குச் சென்று (அவர்கள் முற்றம் வரை கூட ,தவிர்க்க இயலாத சூழலிலும் சென்று ) கால் வைக்காமல் இருப்பது கோடி பெறும். நம்மை உண்ணுங்கள் உண்ணுங்கள் என்று மனமார நம் வயிறார நம்மை உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பெறும். கோடி ரூபாய் கொடுத்தாலும் சகோதர சகோதரிகளுடன் கூடி மகிழ்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது. கோடி கோடியாய் தந்தாலும், நீதி வழுவாத தன்மையும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதலும் பிறழாத நாக்கும் பெற்றிருப்பது கோடி பெறும்.
இத்தன்மைகள் கோடி கொடுத்தும் பெற முடியாத உயர் பண்புகளாகும் . இவற்றை  பின்பற்றினால் நாமும் நாலு கோடிக்கு அதிபதி ஆவோம்.

Ref  :

1 comment:

  1. Catchy title. Good message.

    Well written

    Regards,
    Stella Mary

    ReplyDelete