Monday, 7 December 2015

மனித வாழ்வில்...( இறவாப்புகழ் - 5 )

இத்துடன், இந்த இறவாப்புகழ் தொடரை நிறைவு செய்கிறேன் . இது பற்றிய பாடல்கள், கதைகள் தமிழ் வரலாறு, இலக்கியங்கள் திரைப்படங்களிலும் கூட ஏராளம் உள்ளன. நான் இங்கு பகிர்ந்து கொண்டவை ஆயிரத்தில் ஒரு பங்கேயாகும்.
மனித வாழ்க்கை நிலையற்றது என்று உணர்ந்த அருள் பெரியோர்கள் , இறைவனை உணர்ந்தவர்கள் , பலர் தம் அனுபவங்கள் மற்றும் அறிவுரைகளைப் பாடல்கள் வாயிலாக விட்டுச் சென்றுள்ளனர். நீங்கள் சமயங்களை நம்பாதவராயினும் , அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மட்டுமே உலகைக் காண்பவர்களாயினும், அனைவருக்கும் இது பொதுவானதே. அறிவியல் வரலாறு போன்றவையும் புகழ் பெற்ற செய்திகளையே தம்மிடம் அதிகம் பெற்றுள்ளன.

"தோன்றின் புகழோடு தோன்றுக " என்று வள்ளுவர் கூறுவது போல் உலகில் எவ்வளவோ பேர் தோன்றி மறைகின்றனர் . இவர்களில் யாரை உலகம் நினைக்கிறது? அல்லது இவர்களில் எத்துணை பேர் உலகத்திற்குத் தன்னால் இயன்றவற்றை அளித்துச் சென்றுள்ளனர்? புகழுடன் இருப்போர் மட்டுமே உலகில் தோன்றியவர்களாகக் கருதப்படுகின்றனர் . மற்றவர்கள் இவ்வுலகில் பிறப்பதைவிட பிறவாமல் இருப்பது நல்லது என்கிறார் வள்ளுவர் .

இந்த பிறவியின் நோக்கத்தை உணர்ந்த மனிதர்கள் இருவகை.

முதல் வகை :


இறைவனின் அருளமுதைப் பெற , உலகத்தில் பிற உயிர்களுக்குத் தன்னால் இயன்றதைச் செய்ய மீண்டும் ஒரு பிறவி எடுக்க மாட்டோமா என்று ஏங்கும் ஒரு சாரார் .

"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது " - ஒளவையார்

பிறவியே அரியது. அதிலும் ஆறறிவுள்ள மனிதனாகப் பிறத்தல் அரிது என்றார் ஔவையார்.

"வல்லமை தாராயோ
இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவ சக்தி நிலச்சுமையென
வாழ்ந்திடப் புரிகுவையோ? " - பாரதியார்

சிவசக்தி, நிலத்திற்கு ஒரு சுமையாய் என்னை வைத்து விடாதே. இந்த மனித உலகம் முழுமைக்கும் பயன் உள்ளவனாய் இருக்க வல்லமை கொடு என்கிறார்.

" திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆனேனே " - குலசேகராழ்வார்

இறைவனின் திருமேனியாகவே கருதப்படும் திருவேங்கட மலையில் (திருப்பதி - திருமலா), அந்தச் சுனையில் மீனாய்ப் பிறவி வேண்டுகிறார் குலசேகராழ்வார்.

" மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே " - திருநாவுக்கரசர் (அப்பர்)

சிவபெருமானின் அழகையும், திருவருளையும் அப்பர் காணப்பெற்றதால், இதற்காகவே மனிதப்பிறவி வேண்டும் என்கிறார்.

இரண்டாம் வகை :

போதும் இப்பிறவியில் அனுபவித்தவை. இனி ஓர் பிறவி வேண்டாம். இந்தப் பிறவிக் கடலை நீந்திக் கரை சேர்ந்தால் போதும் என்று மற்றொரு சாரார் .

" .. நானிலத்தில் பல பிறவி எடுத்துத் திண்டாடினது போதாதா .. "

" பிறவா வரம் தாரும் பெம்மானே"

- பாபநாசம் சிவன்
இந்த பிறவி போதும் போதும் என்று தவிக்கிறார் பாபநாசம் சிவன் . அதை இப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

"அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே" - அபிராமி பட்டர்

அபிராமி அந்தாதி பாடல் 22

நான் இறந்து விட வேண்டும். இங்கு இனி பிறக்கக் கூடாது என்று அபிராமியிடம் வேண்டுகிறார்.

"....நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்..." - சிவ வாக்கியர்

எமன் வந்து அழைக்கும் போது நாறும் இவ்வுடல் என்று அதன் நிலையற்ற தன்மையை உணர்த்துகிறார்.

ஒருவர் உயிருடன் இருக்கும் வரை அவரைப் பெயர் சொல்லி அழைப்போம் . அவர் இறந்த பிறகு , அவர் உடலுக்குப் பெயர் நீங்கிவிடுகிறது.
"அவர் இருக்காரா? எப்ப வருவார் ? " என்று அதுவரை கேட்டவர்கள் இறந்த பின் ,"body எப்ப எடுக்றாங்க ? body எப்ப சொந்த ஊருக்குக் கொண்டு வராங்க ? " என்று தான் கேட்பார்கள் . திருமூலர் இதை மிக அழகாகப் பாடியிருக்கிறார் .

நூல் : திருமந்திரம் , பாடல் : 145

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே


ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் - ஊர் கூடி ஒப்பாரியிட்டு சத்தமாக அழுவது
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் - இறந்தவரின் உடலைச் சுட்ட "உடல்" என்ற சொல்லே பயன்படுகிறது. ஆதலால் ,அவர் பெயர் நீங்கி விட்டது.
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு - இறந்தவர் உடலைச் சுடுகாட்டில் எறித்து விட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே - அதன் பிறகு வீட்டிற்கு வந்து குளிப்பது மற்றும் பிற வழக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றுடன் , இறந்தவர்களின் நினைவையும் மக்கள் மறந்துவிடுகின்றனர் .
இறந்தவரின் பெயர் நீங்கி அவரின் நினைவுகளும் நீங்கிவிடுகிறது. இதுவே இறந்தவரின் நிலை என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த முன்னோர் வழி சிந்தித்தால் நம் பிறவியின் அருமை தெரிய வரும். இது வரை நாம் கடந்து வந்த பாதைகள் வழி தவறினாலும் இறைவன் அளித்த இவ்வாழ்வை இனி , இனிதுடையது ஆக்குவோம். புதியதோர் உலகம் செய்வோம்.   










4 comments:

  1. Your blogs are turning to be more philosophical :)

    Nice!

    Wishes,
    R. Bhavani

    ReplyDelete
  2. Simply fab!

    Regards,
    Malarkodi

    ReplyDelete
  3. Nice way to end this series.

    Regards,
    Stella Mary

    ReplyDelete