Thursday, 10 December 2015

காசு பெரிதில்லை காதல் பெரிதெனக்கு !!!

இன்றைய நவீன உலகில் , வீட்டிலும் , அலுவலகத்திலும் பல வித வேலைகளைப் பொறுப்புணர்வுடன் குறித்த நேரத்தில் செம்மையாய்ச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .

இதனை யிதனாலிவன்முடிக்கு மென்றாய்ந் ததனை யவன்கண் விடல்  - குறள் 517

இக்குறளுக்கு ஏற்ப நேர மேலாண்மை, குழுவாக வேலை செய்தல்,  வேலைகளை அவரவர் திறமைக்கேற்பப் பிரித்தளித்தல் ( time management, team work, delegation of tasks ) போன்றவை மிக இன்றியமையாததாகும்.   இது பற்றிய பயிற்சிகளும் , கருத்தரங்குகளும்,ஆளுமைத்திறன் வகுப்புகளும் நிறுவனங்களில் நடத்தப்படுகின்றன. ஓர் 100 ஆண்டுகளுக்கு முன் சிந்தித்தால் , ஆண்கள் பொருள் ஈட்டினர். பெண்கள், பெரியவர்கள் குடும்பத்தைப் பேணி காத்தனர். ஆனால் , இன்று பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே நேரத்தில், குடும்பத்தில் குழந்தைகள், பெரியவர்களை கவனித்தல், வீட்டிற்குத் தேவையானவற்றைச் செய்தல் போன்றவற்றில் அவர்களால் முழுமையாக ஈடுபட இயலவில்லை. இதற்காக அவர்கள் நம்பியிருப்பது வேலையாட்களைத்தான் .
நான் யாரையும் புண்படுத்தும் நோக்குடன் இதை எழுதவில்லை. ஒரு எடுத்துக்காட்டாகவே இதை எழுதுகிறேன் .

நம் வீடுகளில் வேலையாட்கள் இருக்கும் மகிழ்ச்சி ஒரு புறம் . அப்பாடா என்ற பெருமூச்சு. ஆனால் நாளடைவில் ,நம் புலம்பல்கள் அதிகமாகின்றன. ஊதியம் அதிகம் கேட்பார்கள். அவர்கள் நாம் பாத்திரங்கள் அதிகம் போட்டால் போட்டு உடைப்பார்கள் . நாம் ஒருவிதம் சொன்னால் அவர்கள் வேறு விதம் செய்வார்கள் . நம் வீட்டில் விருந்தினர் வரும் நேரத்தில் விடுப்பு எடுப்பார்கள் . காரணம் கேட்டால் பல பொய்கள் சொல்வர். நம் வீட்டில் நடக்கும் சண்டைகள் ஊடகங்களின் அவசியமின்றிப் பலரைச் சென்றடையும். நாம் அவர்கள் வேண்டாம் என்று நினைத்தாலும் , நம்மால் முழு பொறுப்பும் ஏற்க இயலவில்லை. தீபாவளி, பொங்கல் ஊக்கத்தொகை, உணவுப்பொருட்கள் ,உடைகள் என்று அவரவர் சக்திக்கு ஏற்ப எவ்வளவு செய்தாலும் , அதை அவர்கள் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. ஒரு பிரச்சனை உலகில் இருந்தால் , அதற்கான தீர்வும் இருக்க வேண்டுமல்லவா? தீர்வைப் பற்றி சிந்திக்கையில் , இது முதலில் எப்போது தொடங்கியது என்று எண்ணுவோம் . இது நம் காலத்தில் மட்டும் தானா .. இல்லை இல்லை. பாரதியார் காலத்திலும் இவை இருந்துள்ளன. பாரதியும் வேலையாட்களால் அவதிப்பட்டிருப்பார் போலும். அவர் கவி அல்லவா? தன் இன்னல்களைக் கவிதையாகவே எழுதியுள்ளார்.

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
‘ஏனடா,நீ நேற்றைக் கிங்குவர வில்லை’யென்றால்,
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்;ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;
சேவகரால் பட்ட சிரமமிக வுண்டு,கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ,செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்

இப்படி அவர் அல்லல் படுகையில், ஒருவன் வருகிறான் .

அல்லல் நீக்க வருகிறான் ஓர் வேலையாள்

எங்கிருந்தோ வந்தான்“இடைச் சாதி நான்”என்றான்;
“மாடுகன்று மேய்த்திடுவேன்,மக்களை நான் காத்திடுவேன்;
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே;
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும்,கள்ளர்பய மானாலும்,
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை,தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்;
கற்ற வித்தை யேதுமில்லை;காட்டு மனிதன்;ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன்;சற்றும் நயவஞ் சனைபுரியேன்”
என்று பல சொல்லி நின்றான்.

நான் இடையன் சாதி. ( அக்காலத்தில் வீட்டில் மாடுகள் வைத்திருந்தனர். அதைப் பார்க்கவும் ஆட்கள் தேவைப்பட்டனர். ) மாடு கன்றுகள் மேய்ப்பேன். வீட்டு வேலைகள் அனைத்தும் செய்வேன். சிரமத்தைப் பார்க்காமல் உங்களுக்கு எந்நேரமும் காவலாய் இருப்பேன். எனக்கு கோலடி, குத்துப்போர், மற்போர் தெரியும். உங்களைத் துளியும் ஏமாற்ற மாட்டேன் என்று சொன்னான்.

விவரம் கேட்டறிதல்

“ஏதுபெயர்? சொல்” என்றேன்
“ஒன் றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை” என்றான்
கட்டுறுதி யுள்ளவுடல் கண்ணிலே நல்லகுணம்,
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல்-ஈங்கிவற்றால்,
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,...

அவன் பெயரைக் கேட்கிறார். ஊரில் உள்ளவர்கள் கண்ணன் என்று அழைப்பார்கள் என்றான். உறுதியான உடல், பார்வையிலே நல்ல குணம், ஏற்கனவே பழகிய ஆள் போலவே ஒரு பேச்சு. இவன் தான் சரியான ஆள் என்று மனதில் மகிழ்ச்சியுடன் அடுத்த கட்டத்திற்குச் சென்றார்.

ஊதியம் கேட்டல்

“....மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு”கென்றேன்.“ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும்
ஆன வயதிற் களவில்லை;தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை;நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை“யென்றான்.

நன்றாகப் பேசுகிறாய். புகழுரையும் சொல்கிறாய். கூலி என்ன கேட்கிறாய் என்றார். எனக்கு மனைவி, குழந்தைகள் இல்லை. நான் ஒரு தனியாள் . நீங்கள் என்னை அன்புடன் ஆதரித்தால், அதுவே போதும் . காசெல்லாம் பெரிதில்லை.

கண்ணனை ஆட்கொண்ட பாரதி

பாரதியால் நம்ப முடியவில்லை. இவன் என்ன பைத்தியமா ? காசு வேண்டாம் என்கிறானே. எனினும் மகிழ்ச்சியுடன் இவன் தான் சரியான ஆள் என்று ஏற்றுக்கொண்டு விட்டார். பொதுவாக இறைவன் தன் அடியார்களை ஆட்கொண்டுவிட்டதாகப் படிக்கிறோம் . ஆனால் , பாரதியாருக்குப் பெருமிதம் தான் கண்ணனை ஆட்கொண்டேன் என்கிறார். அவர் கண்ணன் மீது பக்தியைத் தாண்டிய பேரன்பு வைத்திருந்தார்.

பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை
ஆளாகக் கொண்டுவிட்டேன்.அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக,நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்;கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெலாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல்,என்குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான்.வாய்முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான்;வீடுசுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெலாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி,வளர்ப்புத்தாய்,வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய் மந்திரியாய்,நல்லா சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான்,இடைச்சாதி யென்று சொன்னான்.
இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!

தன் மக்களைப் பெற்றதை விட, கண்ணனை சேவகனாய்ப் பெறவே தான் தவம் செய்துவிட்டதாகக் கூறுகிறார். ஒரு சேவகன் தாயாய் , அமைச்சனாய், ஆசானாய் விளங்குகிறான் என்றால் அவன் பண்பை என்னவென்று புகழ்வது ? அன்பு, அறிவு, அருள் .... எல்லாம் நிறைந்த மனிதர் உள்ளனரா ? இல்லை. ஆதலாலேயே பண்பிலே தெய்வமாய் என்று புகழ்கிறார்.

கண்ணனின் பேரருள் :

கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம்,இளமாண்பு,சீர்,சிறப்பு,நற்கீர்த்தி,
கல்வி,அறிவு,கவிதை,சிவயோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம்,என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!

கண்ணன் தன் வீட்டிற்கு வந்த நாளிலிருந்து, அனைத்து நலன்களும் பெற்று மகிழ்வதாக அவர் கூறுகிறார். இறைவனே சேவகனாய் வந்ததாகக் கூறும் பாரதியின் ஊக்கமும், மகிழ்ச்சியும், கண்ணன் மீது அவர் கொண்ட பற்றும் இதன் மூலம் விளங்குகிறது.

Ref :

3 comments:

  1. The doyen of modern Tamil literature also found a quote in your blog!
    Good job!

    Wishes,
    R. Bhavani

    ReplyDelete
  2. Can you please format this post and include paragraphs line spaces. Thats the only missing piece of this beautiful article.

    Regards,
    Stella Mary

    ReplyDelete
    Replies
    1. Looks good now. Thanks for incorporating the changes, Iswarya.

      Regards,
      Stella Mary

      Delete