Monday, 23 November 2015

கற்பகப்பூ ( இறவாப்புகழ் - 1 )

பிரிவு !
நம் அன்பிற்குரியவர்களை நாம் இழக்கும் போது நம் மனம் சொல்லொணாத் துயர் அடைகிறது. மனித வாழ்நாள் என்றோ ஓர் நாள் முடிவடையும் என்ற உண்மையை அறிந்த போதிலும் , நம் மனம் அத்தருணத்தில் அதை ஏற்க மறுக்கிறது.

" மனக்கவலை மாற்றலரிது" என்பது போல் , அவர்களுடனான நம் நினைவுகள் , மீண்டும் மீண்டும் ஓர் இனம் புரியா உணர்ச்சியில் நம்மை ஆழ்த்துகின்றன. காலப்போக்கில் அவை மறைந்தாலும் , அவ்வப்போது ஏதாவது நிகழ்வுகள், காட்சிகள் போன்றவை மூலம் வெளிப்படுகின்றன.

இந்தப் பிரிவின் வலிதான் எவ்வளவு கொடியது? நமக்கு வேண்டப்பட்டவர் தான் என்றில்லை. அது நாம் அறியாத ஒருவராய் இருப்பினும் கூட , இந்தப் பிரிவைக் கேட்க நேர்ந்தால்,இரங்கல் தெரிவிப்பதும் , துக்கம் விசாரிப்பதும் , இறந்தவர் வீட்டில், அவர் உடலுக்கு மலர் மாலை இடுதலும் , மௌன அஞ்சலி செலுத்துவதும் நம் நாட்டு மரபாக உள்ளது.

நம் புராணங்களிலும் ,இலக்கியங்களிலும் கூட இவ்வலியை உணர முடிகிறது. மகாபாரதத்தில் கர்ணன் இறந்த போது , அவன் தாய் அழுகிறாள் . அருகே மற்றொரு பெண் அழுகிறாள். அவளைப் பார்த்து " அம்மா, நான் கர்ணனின் தாய். அவன் பிரிவைத் தாங்காது அழுகிறேன் . நீ யார் , ஏன் அழுகிறாய் ? " என்று வினவினாள். அப்போது அவள் கூறினாள் , " நான் தர்மதேவதை (அறக்கடவுள்) எனக்கென்று , இப்பூவுலகில் ஒரே ஒரு மகனாகக் கர்ணன் இருந்தான் அவனும் இறந்துவிட்டான் . ஆதலால் அழுகிறேன்" . கொடுத்தே (தானம் தந்த கொடை வள்ளல்) சிவந்த கைகள் அல்லவா கர்ணனின் கைகள் ? இனி கர்ணன் போல் ஒருவனைக் காணத்தான் இயலுமோ?

தற்போதும் , தலைவர்கள் , பிரிவுகளுக்கு இரங்கல் செய்தி தெரிவிப்பதை ஊடகங்கள் மூலம் அறிகிறோம் . அக்காலத்தில் , புலவர்கள் தம் வலியைப் பாக்கள் மூலம் வெளிப்படுத்தினர் . அதன் பெயர் இரங்கற்பா . இப்போது ஓர் பாடலைக் காண்போம் .

கூவத்து நாரணன் என்றொரு வள்ளல் இருந்தார். புலவர் மக்களைப் பெரிதும் ஆதரித்தவர் . அவர் புகழைச் சொல்லும் ஒரு பாடல் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) நூலில் இடம் பெற்றுள்ளது. அதற்கான குறிப்பைக் கீழே தந்துள்ளேன் (Refer link below). அவர் இறந்த துக்கத்தைத் தாளாமல், இரட்டைப்புலவர்கள் ( ஒருவர் பார்வை இழந்தவர், மற்றொருவர் முடவர் ) இயற்றிய பாடல்.

இடுவோர் சிறிது; இங்கு
இரவோர் பெரிது
கெடுவாய், நமனே!
கெடுவாய் - படுபாவி!
கூவத்து நாரணனைக்
கொன்றாயே! கற்பகப் பூங்
கா வெட்டலாமோ
கரிக்கு?


விளக்கம் :
இவ்வுலகில் வள்ளல்கள் மிகச்சிலரே . ஆனால் , பொருள் வேண்டும் (யாசிக்கும்) மக்களோ மிக அதிகம் . இவ்வாறிருக்கையில், வள்ளலாகிய நாரணன் உயிரைப் பறித்து விட்டாயே . எமனே, உனக்கு எரிபொருள் ( கரி) வேண்டும் என்பதற்காகக் காட்டில் வீண் மரங்கள் எவ்வளவோ உள்ளன. அதை விடுத்துக் கேட்டவையல்லாம் தரும் கற்பக மரத்தை வெட்டிவிட்டாயே ? நீ கெட்டுப்போவாய்.

கவிநயம் :
இடுவோர் - இரப்போர்க்குப் பொருள் இடுவோர் ( தானம் தரும் கொடை வள்ளல் )
இரவோர் - பொருள் இரந்து (யாசித்து) வாழ்வோர்
நமன் - எமன்
கெடுவாய், நமனே! கெடுவாய் - படுபாவி! - எமனே இத்தகைய செயலைச் செய்த பாவி நீ கெடுவாய் ( உனக்குத் தீமையே விளையும் என்று மனம் நொந்து ஆற்றாமையால் எமனை நிந்தித்தனர் )
கற்பகப்பூங்கா வெட்டலாமோ கரிக்கு?
" மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர் " என்று வள்ளுவர் கூறுவது போல் , உயிர் வாழ்ந்தும் பயனிலா மக்கள் உள்ளனர் . இத்தகையோரைப் பயனிலாக் காட்டு மரங்களுக்கு ஒப்பாகவும் , அம்மரங்களுள் அனைவர்க்கும் பயன் தரும் கற்பக மரத்தை , வள்ளல் கூவத்து நாரணனுக்கு ஒப்பாகவும் கொள்ள வேண்டும் .
மரத்தை வெட்டுவது உயிரைப் பறிப்பதற்கு ஒப்பாகும்
கற்பகம் - ( வேறு பெயர்கள் கற்பகத்தரு, கல்ப தரு,கல்பக விருட்சம் ) உயர்ந்த மணம் கொண்ட சந்தன மரத்தையும் இது குறிக்கும் .

இத்தகைய மாமனிதர்கள் இறந்தாலும் , இறவாப்புகழ் பெற்று விளங்குகின்றனர்.


Ref :


Karnan - Tamil movie


about Koovathu Naranan - Tamil VU


Karnan movie - wiki


Karnan - wiki


ninaivu blog


pavalamalai - blog

Opilaamani pulavar songs - song 9 - wiki

Irattai Pulavar - wiki


Karapagam - wiki

தமிழ் அகராதி - வர்த்தமானன் பதிப்பகம்

4 comments:

  1. Nice article with a very good reading experience. Reference to Karnan Movie in reference was a pleasant surprise.

    Keep up your good work.

    Malarkodi

    ReplyDelete
  2. Informative.
    Thanks, Stella Mary

    ReplyDelete
  3. Initial few lines made me sentimental.

    Good article.

    Wishes,
    R.Bhavani

    ReplyDelete
  4. Written passionately. Well done, Madam!

    Regaeds,
    D.Nithila

    ReplyDelete