Friday, 27 November 2015

பெருஞ்சேரலாதன் ( இறவாப்புகழ் - 2 )

உடல் மண்ணுக்கு, உயிர் தன் தாய்நாட்டிற்கு என்று அளித்த , வீரர்கள் வாழ்ந்த நாடு நம் நாடு. போர்க்களத்தில் இறக்கும் வீரரின் உடலைப் "புகழுடம்பு" என்றும் , அவர்கள் முகத்திலும் நெஞ்சிலும் ஏற்பட்ட காயங்களை  "விழுப்புண்" என்றும் குறிப்பிட்டனர். நாட்டிற்காக உயிர் துறந்து வரலாற்றில் அழியாப் புகழ் எய்தியதால், அவர் புகழுடம்பு எய்தினார் என்றும் வீரமரணம் எய்தினார் என்றும் குறிப்பிட்டனர்.

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே - வாய்ச்சொல்லில் வீரரடீ"
என்று பாரதியார் பாடியது போல்,  வீரத்திற்குக் களங்கம் விளைக்கும் கோழைகளும் இருந்தனர். இவர்கள் போர்க்களத்தில், எதிர் வருவோரை எதிர்கொள்ள இயலாமல், முதுகைக்காட்டி ஓடினர்.
இது "புறமுதுகு" என்றும், முதுகில் ஏற்பட்ட புண் , "புறப்புண்" என்றும் குறிக்கப்பட்டது. இது மிகவும் வெட்கித் தலைகுனியும் , ஓர் அடையாளம்.
தமிழ்நாட்டில் ஒருமுறை சோழ மன்னன் கரிகாலன், சேர மன்னன் பெருஞ்சேரலாதன் இருவரும் , வெண்ணிப் பறந்தலை (தற்போது கோவில்வெண்ணி) என்ற இடத்தில் போரிட்டனர். இவ்விடம் , தஞ்சை மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ளது.வெள்ளை நிறமான  நந்தியாவட்டைப் பூக்கள் ( வெண்ணி) , நிறைந்த இடம் என்பதால் இப்பெயர் என அறிகிறோம் .
போரில் , கரிகாலன் வெற்றி பெற்றான். கரிகாலன் எறிந்த வேல் , சேரனின் நெஞ்சைக் கிழித்து, முதுகையும் புண்ணாக்கியது. சேரன் உயிர் பிரியவில்லை. அவன் மிகவும் மனம் நொந்தான் . இவ்வுடல் இன்னும் இங்கு இருக்கத்தான் வேண்டுமா ? மாவீரனாய் களத்தில் போரிட்டுத் தோற்ற போதிலும் , முதுகில் ஒரு புண் ஏற்பட்டுவிட்டதே. என் உயிர் அதற்கு முன்னமே பிரிந்திருக்கக் கூடாதா? ஆனால், அதிலும் ஒரு காரணம் இருந்தது போலும் . அதன் பொருட்டே, அவன் அழியாப்புகழ் பெற்றான். அது என்ன காரணம்?
சேரன் ஓர் வீரனை அழைத்து தர்ப்பைப்புல் கொணரச் செய்தான். போரில் தன் உயிர் பிரியாததால் களத்திலேயே தர்ப்பைப்புல்லால் ஓர் ஆசனம் அமைத்து, அதில் வடக்கு நோக்கி நோன்பிருந்து உயிர் விட்டான் . அவனைப் பின்பற்றி இன்னும் சில வீரர்களும் அவ்வாறே செய்தனர்.
இவனின் உயர்ந்த செயலைக் கண்ட வெண்ணிக்குயததியார் ( பெண்புலவர்) , போரில் வென்ற கரிகாலனை விட , புறப்புண் நாணி வடக்கு நோக்கி நோன்பிருந்து உயிர் விட்ட சேரன் அல்லவா மிக நல்லவன் என்று எண்ணி, கரிகாலனைப் பார்த்துப் பின்வரும் பாடலைப் பாடினார். 

பாடல் இடம்பெற்ற நூல் - புறநானூறு
பாடல் எண் - 66

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக் கிருந்தோனே.

அருஞ்சொற்பொருள் 

நளியிரு முந்நீர் - நிறைந்த நீரைக் கொண்ட பெரிய கடல்
முந்நீர் - கடல் ( முந்நீர் = மூன்று + நீர் , ஆற்றுநீர் ஊற்று நீர், மழை  நீர் 3ம் சேறும் இடம் கடல்)
நாவாய் - கப்பல் ,மரக்கலம்
உரம் - வலிமை , உரவோன் - வலிமையுடையவன்
களி - மகிழ்ச்சி, இயல் - இயல்பு, களி இயல் யானை கரிகால் வளவ !  - மகிழ்ச்சியான இயல்போடும் செருக்கோடும் உள்ள யானை மேல் வரும் கரிகாலவளவனே
அமர் - போர்க்களம்
நின்னினும் நல்லன் அன்றே - உன்னைவிட நல்லவன் அல்லவா
யாணர் - புதுமை, கலி - மிகுதி / கடல்
கலிகொள்யாணர்  வெண்ணிப் பறந்தலை - மிக அதிகமாகப் புது வருவாய் உள்ள வெண்ணிப்பறந்தலை ஊர் 
கரிகாலன்  - கரிகால பெருவளத்தான், கரிகால வளவன் - வேறு பெயர்கள்
மருக! வளவ!வென்றோய் என்ற சொற்கள் மன்னனை நோக்கிய விளிச் சொற்கள் . (addressing the king)

விளக்கம்

கடலில் காற்றின் இயல்பை அறிந்து அதற்கேற்ப , கப்பலைச் செலுத்தும் வலிமையான தொழில்புரிவோரின் வழி தோன்றிய மன்னனே (மருக! மருமகன் என்ற பொருளும் உண்டு) கரிகாலனே. நீ உன் ஆற்றல் வெளிப்படுமாறு போர்க்களத்தில் வென்றாய் . ஆனால் , உன்னிடம் தோற்ற பெருஞ்சேரலாதன் புறப்புண்ணுக்காக நாணிக் களத்திலேயே நோன்பிருந்து உயிர் துறந்தான். அவன் உன்னை விட நல்லவன் அல்லவா ? .

அரிய/அறிய வேண்டிய தகவல்

காற்றின் இயல்பை அறிந்து அதன்படி, கப்பல் செலுத்தியவர்கள் தமிழர்கள் என்ற அறிவியல் உண்மை புலனாகிறது.
புறநானூற்றில் இது போன்ற மிக அழகான பாடல்கள் நிறைய உள்ளன. அது, தமிழரின் வீரம், புகழ், கொடைத்திறம், போன்றவற்றைப் பறைசாற்றும் ஒப்பற்ற பாடல்களின் தொகுப்பாகும் .

Ref :

Monday, 23 November 2015

கற்பகப்பூ ( இறவாப்புகழ் - 1 )

பிரிவு !
நம் அன்பிற்குரியவர்களை நாம் இழக்கும் போது நம் மனம் சொல்லொணாத் துயர் அடைகிறது. மனித வாழ்நாள் என்றோ ஓர் நாள் முடிவடையும் என்ற உண்மையை அறிந்த போதிலும் , நம் மனம் அத்தருணத்தில் அதை ஏற்க மறுக்கிறது.

" மனக்கவலை மாற்றலரிது" என்பது போல் , அவர்களுடனான நம் நினைவுகள் , மீண்டும் மீண்டும் ஓர் இனம் புரியா உணர்ச்சியில் நம்மை ஆழ்த்துகின்றன. காலப்போக்கில் அவை மறைந்தாலும் , அவ்வப்போது ஏதாவது நிகழ்வுகள், காட்சிகள் போன்றவை மூலம் வெளிப்படுகின்றன.

இந்தப் பிரிவின் வலிதான் எவ்வளவு கொடியது? நமக்கு வேண்டப்பட்டவர் தான் என்றில்லை. அது நாம் அறியாத ஒருவராய் இருப்பினும் கூட , இந்தப் பிரிவைக் கேட்க நேர்ந்தால்,இரங்கல் தெரிவிப்பதும் , துக்கம் விசாரிப்பதும் , இறந்தவர் வீட்டில், அவர் உடலுக்கு மலர் மாலை இடுதலும் , மௌன அஞ்சலி செலுத்துவதும் நம் நாட்டு மரபாக உள்ளது.

நம் புராணங்களிலும் ,இலக்கியங்களிலும் கூட இவ்வலியை உணர முடிகிறது. மகாபாரதத்தில் கர்ணன் இறந்த போது , அவன் தாய் அழுகிறாள் . அருகே மற்றொரு பெண் அழுகிறாள். அவளைப் பார்த்து " அம்மா, நான் கர்ணனின் தாய். அவன் பிரிவைத் தாங்காது அழுகிறேன் . நீ யார் , ஏன் அழுகிறாய் ? " என்று வினவினாள். அப்போது அவள் கூறினாள் , " நான் தர்மதேவதை (அறக்கடவுள்) எனக்கென்று , இப்பூவுலகில் ஒரே ஒரு மகனாகக் கர்ணன் இருந்தான் அவனும் இறந்துவிட்டான் . ஆதலால் அழுகிறேன்" . கொடுத்தே (தானம் தந்த கொடை வள்ளல்) சிவந்த கைகள் அல்லவா கர்ணனின் கைகள் ? இனி கர்ணன் போல் ஒருவனைக் காணத்தான் இயலுமோ?

தற்போதும் , தலைவர்கள் , பிரிவுகளுக்கு இரங்கல் செய்தி தெரிவிப்பதை ஊடகங்கள் மூலம் அறிகிறோம் . அக்காலத்தில் , புலவர்கள் தம் வலியைப் பாக்கள் மூலம் வெளிப்படுத்தினர் . அதன் பெயர் இரங்கற்பா . இப்போது ஓர் பாடலைக் காண்போம் .

கூவத்து நாரணன் என்றொரு வள்ளல் இருந்தார். புலவர் மக்களைப் பெரிதும் ஆதரித்தவர் . அவர் புகழைச் சொல்லும் ஒரு பாடல் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual University) நூலில் இடம் பெற்றுள்ளது. அதற்கான குறிப்பைக் கீழே தந்துள்ளேன் (Refer link below). அவர் இறந்த துக்கத்தைத் தாளாமல், இரட்டைப்புலவர்கள் ( ஒருவர் பார்வை இழந்தவர், மற்றொருவர் முடவர் ) இயற்றிய பாடல்.

இடுவோர் சிறிது; இங்கு
இரவோர் பெரிது
கெடுவாய், நமனே!
கெடுவாய் - படுபாவி!
கூவத்து நாரணனைக்
கொன்றாயே! கற்பகப் பூங்
கா வெட்டலாமோ
கரிக்கு?


விளக்கம் :
இவ்வுலகில் வள்ளல்கள் மிகச்சிலரே . ஆனால் , பொருள் வேண்டும் (யாசிக்கும்) மக்களோ மிக அதிகம் . இவ்வாறிருக்கையில், வள்ளலாகிய நாரணன் உயிரைப் பறித்து விட்டாயே . எமனே, உனக்கு எரிபொருள் ( கரி) வேண்டும் என்பதற்காகக் காட்டில் வீண் மரங்கள் எவ்வளவோ உள்ளன. அதை விடுத்துக் கேட்டவையல்லாம் தரும் கற்பக மரத்தை வெட்டிவிட்டாயே ? நீ கெட்டுப்போவாய்.

கவிநயம் :
இடுவோர் - இரப்போர்க்குப் பொருள் இடுவோர் ( தானம் தரும் கொடை வள்ளல் )
இரவோர் - பொருள் இரந்து (யாசித்து) வாழ்வோர்
நமன் - எமன்
கெடுவாய், நமனே! கெடுவாய் - படுபாவி! - எமனே இத்தகைய செயலைச் செய்த பாவி நீ கெடுவாய் ( உனக்குத் தீமையே விளையும் என்று மனம் நொந்து ஆற்றாமையால் எமனை நிந்தித்தனர் )
கற்பகப்பூங்கா வெட்டலாமோ கரிக்கு?
" மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர் " என்று வள்ளுவர் கூறுவது போல் , உயிர் வாழ்ந்தும் பயனிலா மக்கள் உள்ளனர் . இத்தகையோரைப் பயனிலாக் காட்டு மரங்களுக்கு ஒப்பாகவும் , அம்மரங்களுள் அனைவர்க்கும் பயன் தரும் கற்பக மரத்தை , வள்ளல் கூவத்து நாரணனுக்கு ஒப்பாகவும் கொள்ள வேண்டும் .
மரத்தை வெட்டுவது உயிரைப் பறிப்பதற்கு ஒப்பாகும்
கற்பகம் - ( வேறு பெயர்கள் கற்பகத்தரு, கல்ப தரு,கல்பக விருட்சம் ) உயர்ந்த மணம் கொண்ட சந்தன மரத்தையும் இது குறிக்கும் .

இத்தகைய மாமனிதர்கள் இறந்தாலும் , இறவாப்புகழ் பெற்று விளங்குகின்றனர்.


Ref :


Karnan - Tamil movie


about Koovathu Naranan - Tamil VU


Karnan movie - wiki


Karnan - wiki


ninaivu blog


pavalamalai - blog

Opilaamani pulavar songs - song 9 - wiki

Irattai Pulavar - wiki


Karapagam - wiki

தமிழ் அகராதி - வர்த்தமானன் பதிப்பகம்

Friday, 20 November 2015

எது அழகு?

நம் கண்களையும், மனதையும் அதிகம் கவருவது அழகுதான் . நாம் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது இயல்பே. அழகைப் பற்றிய நம் மதிப்பீடுகளும் அளவுகோல்களும் நிறைய உள்ளன. அதுவும் நம் ஆளுமையை ( personality ) வெளிப்படுத்தும் , ஓர் கருவியாகவே நினைக்கிறோம். ஆங்கிலக் cream களிலிருந்து, ஆயுர்வேதா வரை பல்வேறு பொருட்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரைப் பயன்படுத்த இன்று அங்காடிகளில் கிடைக்கும். விலை கொடுத்து வாங்கும் இவையா அழகு ?. விலைமதிப்பற்ற நம் அழகு எங்கே ?

அழகு என்பது பல்வகைப்பட்டது. ஐந்து நாட்களின் சிகப்பழகுடன் மட்டுமே அது நின்றுவிடவில்லை. நிறம், தோற்றம் என்று வரையறைகள் அழகிற்கு இல்லை. நீங்கள் மறுமுறை உங்கள் அழகைக் கூட்ட நினைக்கும்போது, அல்லது நீங்கள் உங்கள் மனதளவில் யாருடனாவது தங்களை ஒப்பிட்டு நாம் அவ்வளவு அழகாக இல்லை என்று நினைத்தால், உங்கள் அளவுகோலை மாற்றுங்கள். உங்கள் குறிப்புப்புள்ளியை ( reference point ) மாற்றுங்கள் .

நம் இலக்கியம் சொல்வதை நினைவுகூறுங்கள் . இது ஆண்கள் ,பெண்கள் அனைவருக்கும் பொருந்தும் . உங்களிடம் யாரேனும் அழகுக் குறிப்பு கேட்டால், இதை மறவாமல் பகிருங்கள் . உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் .

நாலடியார் - பாடல் 131
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு

பொருள் :

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல -

குஞ்சி என்பது ஆண் தலைமுடி ஆகும் .அந்தக் குடுமியின் அழகும் (அந்தக் காலத்தில் ஆண்கள் குடுமி வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது ), முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதினால் ஏற்படும் அழகும் அழகல்ல. ஏன் இவை அழகல்ல என்று இங்கே நாம் காண வேண்டும். நாம் அறிவியலில் relative measurements படித்திருப்போம் . ஒன்றை அளவிடும்போது, அது சார்ந்த மற்றொன்றை ஒப்பிடுகையில் , அதில் எது சிறந்தது அல்லது உயர்வானது என்பது புலப்படும் . இங்கே கல்வியினால் நாம் பெறும் அறநெறி தவறாத வாழ்க்கையை ஏனைய பொருட்கள் தரும் தோற்ற அழகோடு ஒப்பிடும்போது, அவை மிக மிக அற்பமானவை . ஏனெனில் நாம் வாழ்வில் வளர்ச்சி பெற கல்வியும் அறமுமே உதவுகின்றன.

நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு -

நாம் உண்மை நெறிக்கு ஏற்ப நடுவுநிலைமையுடன் ( அறம் தவறாது ) வாழ்கிறோம் என்ற பெருமிதமும் , அப்படி வாழ்வதற்கான நெறிகளைக் கற்றுத்தந்த கல்வியினால் நாம் பெறும் அழகே உண்மையான அழகாகும்.


Ref :


Naaladiyar - wiki


aga azhagum muga azhagum - tamil hindu


Naaladiar song 131 - Tamil VU


poopoova - blog


Kunji - wiki

Thursday, 19 November 2015

காதல் - ( நளவெண்பா - 3 )

காதல் ...... காலம் காலமாய், கதைகளிலும் , காவியங்களிலும், திரைப்படங்களிலும் , வாழ்விலும் கண்டு வரும் ஓர் அழகான அனுபவம் .(இதை நான் சரியாக விளக்கவில்லை எனில், காதலர்கள் என்னை மன்னித்துவிடுங்கள்!). ஏனெனில், இதைச் சொல்ல வார்த்தைகள் போதாது.

காவியங்களில், எத்தனையோ காதலர்களைப்பற்றி அறிந்திருப்போம். அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட் இன்னும் பல. இவற்றில், என்னை ஈர்த்த நள - தமயந்தி காதலைப் பற்றிய நளவெண்பாப் பாடல் ஒன்றை இங்கே விளக்கப்போகிறேன். இங்கு நான் மிகச்சுருக்கமாகவே கூறியிருக்கிறேன் . இக்கதை அல்லது நளவெண்பா முழுதும் நீங்கள் அறிய விரும்பினால், அதற்கான இணைப்பைக் கடைசியாகத் தந்துள்ளேன்.( links in reference section below )

தமயந்தி சுயம்வரம் கதைச்சுருக்கம் :

அழகிலும்,அறிவிலும் தன்னிகரற்ற கற்புக்கரசி தமயந்திக்கு சுயம்வரம் நடக்கிறது. இதற்கு ( நளன் உட்பட ) மண்ணுலக மன்னர்கள் போக, விண்ணிலிருந்த தேவர்களும் வந்தனர். அவர்கள் தமயந்தி நளன் மீது கொண்ட காதலை அறிந்து, நளன் போலவே உருவு கொண்டு காட்சியளித்தனர்.

அனைவரும், நளன் போல் காட்சியளித்ததை எண்ணித் தமயந்தி குழம்பினாள். மனம் முழுதும் நளனை அடைவதிலேயே இருந்தது. நளனை எப்படி அறிவது ? . " அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்" என்று வள்ளுவர் கூறியது போல், அவள் அன்பை அடைத்த தாழ்ப்பாளைத் திறக்கவும் ஓர் வழி பிறந்தது .ஒரு கணம் மனதார இறைவனையும் தேவர்களையும் கீழ்வரும் பொருளில் வழிபட்டாள். " நான் நளன் மீது உயிர்க்காதல் கொண்டுள்ளேன் . மணவாழ்க்கை அவருடன் மட்டுமே.அவரைக் கண்டுகொள்ள உதவுங்கள் "

அவள் எவ்வாறு நளனைக் கண்டறிந்தாள் என்பதைப் பின்வரும் பாடல் மூலம் அறிகிறோம் .

சுயம்வரத்தில், தமயந்தி நளன் உருப்போந்த தேவர்களுக்கு நடுவில் நளனை அறிதல் - பாடல் 160

கண்ணிமைத்த லாடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி
நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே அன்னாள்
அறிந்தாள் நளன்றன்னை ஆங்கு


தேவர்களுக்கு மனிதர்களிடமிருந்து சில வேறுபாடுகள் உண்டு. தேவர்களின் கண்கள் இமைக்காது. கால்கள் பூமியில் படாது. அவர்கள் சூடும் மாலை வாடாது. ஆனால் மனிதர்களிடத்தில் இவற்றை (கண் இமைத்தல், மாலை வாடுதல், வியர்வை) இயல்பாகக் காண முடியும் .இவை நளனிடமும், காணப்பட்டன. இதை வைத்து நளனை மிகச் சரியாக அடையாளம் கண்டு , மாலை சூட்டினாள் தமயந்தி.

தமயந்தியின் அறிவாற்றலையும்,( Presence of mind ) உண்மைக் காதலையும் இதன் மூலம் அறிகிறோம்.

பின்குறிப்பு / Note :
 
கண் இமைத்தலால் - கண்கள் இமைப்பதால்
அடிகள் காசினியில் தோய்வதால் - கால் பாதங்கள் பூமியில் படுவதால்
காசினி - பூமி
எண்ணி நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே அன்னாள் - நறுமணமான தாமரையை விரும்பும் அழகிய நெற்றியுள்ள அந்தப் பெண்,நன்னுதல் - நல் + நுதல் ( நெற்றி)
அறிந்தாள் நளன்றன்னை ஆங்கு - நளனை அங்கே( அவ்விடத்திலே) அறிந்தாள்.
நளன்றன்னை - நளன் தன்னை
ஆங்கு - அங்கே


Ref :


kaasini - wiki


Nalavenba song 160 - Tamil VU


Nalavenba song 160 - Tamil VU - page 2

nannudhal


Annaal - wiki

அரசி - ( நளவெண்பா - 2 )

நளவெண்பாவில், மேலும் சில இனிமையான பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இந்திய மண் வீரப்புகழ் நிரம்பியது. இங்கே தோன்றிய மக்களும் அப்படித்தான். நம் பண்டைக் காலத்திலிருந்தே பெண்களுக்கென்று தனி இடம் உண்டு. வீரம், பண்பு, கல்வி, தொழில், ஆட்சி என பல பரிமாணங்களில் (multi dimensional, multi faceted, versatile) தனித்தன்மை உள்ளவர்களாகவும், குலவிளக்காகவும், தெய்வத்தன்மை கொண்டவர்களாகவும் அவர்கள் இருந்ததை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

இதை நான் பெருமையுடனும் , மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஒரு பெண்ணாகப் பதிவு செய்கிறேன்.பெண்ணின் சிறப்பைப் பண்பு, திறமை ஆகிய இருவகையிலும், இங்கே காண முடிகிறது.இன்றைக்கு வேலைக்கும் சென்று, வீட்டையும் கவனித்து வரும் பெண்களே அதிகம். இவர்கள் எப்போதாவது, தங்கள் ஆற்றலை உணராது, சோர்வாக ( மனச்சோர்வு) இருப்பின் , இப்பாடலை நினைவுகூறுங்கள்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

அன்றைக்கு அரசாட்சிக்கு உறுதுணையாய் அமைச்சர்கள் இருந்தனர். தக்க நேரத்தில், மன்னருக்கு அறிவுரை கூறுவோர் இவர்களே. நான்கு விதப் படைகள், வாள், வேல் போன்ற கருவிகள் , முரசு, செங்கோல், வெண்கொற்றக்குடை ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. இவை யாவும் , இருப்பினும், அவர்களின் பண்பும் அறிவுமே நல்லாட்சிக்கு முக்கியமானதாக இருந்து.இதைக் கீழ் வரும் பாடல் கூறுகிறது.

தமயந்தியின் ஆட்சி - நளவெண்பா - பாடல் 31

நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழே
ஆளுமே பெண்மையரசு


தமயந்தியின் நான்கு குணங்களே (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு), நான்கு படைகளாகவும்(குதிரை, யானை, தேர்,காலாள்), அவளின் புலன்களே நல்ல அமைச்சர்களாகவும், அவளின் சிலம்பே முரசு போலவும், அவள் கண்களே வாள் போல் ஒளி, கூர்மை உள்ளதாகவும் , அவள் முகமே நிலவு போலவும் இருக்கின்றன. இவ்வாறு வெண்கொற்றக்குடைக் கீழ் நீதி வழுவாது தமயந்தி ஆட்சி செய்தாள்.

இவ்வாறு , ஒரு பெண் மிகச்சிறப்பாய் ஆட்சி செய்தது நமக்கு ஒரு முன் உதாரணம். பாரதி கண்ட புதுமைப்பெண் செய்வதெல்லாம் உண்மையில், புதியவை அல்ல. ஆண்டாண்டு காலமாய், பண்பும் திறமையும் மரபணுக்களிலேயே ஊறி வந்தவைகள்தாம். இருப்பினும் , அவை காலப்போக்கில் தொலைந்ததால், அவற்றை மீட்டெடுக்கிறோம்.
இந்தப் பதிவைப் படிக்கும் பெண்களுக்கு இது சமர்ப்பணம்.

பின்குறிப்பு/Note :

Example - Actual object

உவமை - உவமேயம் - ( Simile)
நாற்படை - நான்கு குணங்கள்
அமைச்சர் - ஐம்புலன்கள்
முரசு - சிலம்பு


Reference  :

Thamayanthi - Dinamani article

Thamayanthi rule - Tamil VU

Thamayanthi rule - Tamil VU - page 2

4 padaigal - wiki

4 gunangal - tamilthottam blog

Uvamai - wiki

Uvameyam - wiki

நளபாகம் - ( நளவெண்பா - 1 )

நாம் திருமண விருந்துகளில், நளபாகம் என்று குறிப்பிட்டு, உணவு தயாரிப்போரின் தலைவர் பெயரை எழுதுவதைப் பார்க்கிறோம்.யார் நளன்? அது என்ன நளபாகம் ? மகாபாரத்தின் கிளைக்கதைகளில் ஒன்று நள சரிதம். இதன் தலைவன் நளன், நீதி வழுவாமல், நிடத நாட்டை ஆண்டு வந்தான்.இவன் சமையல் கலையில் வல்லவன். ஆதலால் தான் " நள பாகம்" என்றானது.

நள சரித சுருக்கம் : 

நளன், விதர்ப்ப நாட்டை ஆண்ட பீமன் மகளான தமயந்தி மேல் காதல் கொண்டு சுயம்வரத்தில் அவளை மணந்தான். அது பொறுக்காத கலி நளன் தமயந்தியைப் பிரிக்க எண்ணித் தன் வேலையைக் காட்டினான். நளன் தன் சகோதரன் புஷ்கரனிடம் சூதாடி, அனைத்தையும் இழந்தான்.

தமயந்தி அவன் மீண்டு வரும் வரையில் தன் குழந்தைகளுடன் தந்தையுடன் விதர்ப்ப நாட்டிலேயே இருந்தாள். பின்னர் , நளன் இழந்ததை மீட்டு எவ்வாறு தமயந்தியை அடைந்தான் என்பது வரலாறு கூறும் கதை.

நளனும் தமிழும் 

இந்த நளன் சனி தோஷம் நீங்க வழிபட்ட தலமே திருநள்ளாறு ஆகும். மேலும் , இந்த நளசரிதம் படிப்பவர்களை சனி பாதிப்பதில்லை என்று புராணம் சொல்கிறது. இந்த நளன் கதையைத் தமிழில் மிக அழகாகப் பாடியவர் புகழேந்தி. அவர் இயற்றியதன் பெயர் " நளவெண்பா" ஆகும். அக்காலத்தில் இயற்றப்பட்ட செய்யுட்களுக்கென்று சில மரபுகள்,விதிகள் இருந்தன. அவை அனைத்தையும் பின்பற்றியே அப்படைப்புகளும் இருந்தன. கதை, கதை மாந்தர் தவிர கடவுள் வாழ்த்து (முதல் பாடலாக இடம் பெறும்), நாட்டுச்சிறப்பு, மக்கள் சிறப்பு ஆகியவை அதில் முக்கிய இடம் பெறும் . இதற்கு சான்றாய், நளவெண்பாவில் நிடத நாட்டுச்சிறப்பை உணர்த்தும் இப்பாடலை இங்கே பதிவு செய்கிறேன்.

காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு


ஒரு நாட்டின் வளத்தை, அளவிட நீர் வளம், நில வளம் இன்றியமையாததாகும். அவை சிறப்பாக அமைந்தால், அந்நாடு வளமானதாகும்.
நில வளம் கூறும் நிகழ்ச்சிகள் - குவளை,தாமரை மலர்தல், திருமகள்/ நிலமகள் கண்கள் போல் அந்நிலம் இருத்தல்.
நீர் வளம் குறிக்கும் நிகழ்ச்சிகள் - கெண்டை மீன் பிறழ்தல்,நாடு கடல் சூழ்ந்து இருத்தல்.
காமர் கயல் - கெண்டைமீன்
காவி முகை - காவி நிறமுள்ள மொட்டு(குவளைப்பூ)
நெகிழ - மொட்டு தான் மலரும்போது இருக்கும் மென்மை, மகிழும் உணர்வு
தாமரையின் செந்தேன் தளையவிழப் -
தாமரையில் உள்ளிருக்கும் தேன் , மொட்டு மலரும் போது, தன் தளைகளை அவிழ்த்து , விடுதலை பெற்று வெளி வருகிறது .
பூமடந்தை தன்னாட்டம் போலும்- திருமகள்/நிலமகள் கண்கள் போல் ஒளி பெற்று
தகைமைத்ததே- அத்தகைய தன்மையைத் தன்னிடத்தே கொண்டு,
சாகரம் - கடல்
சாகரஞ்சூழ் நன்னாட்டின் முன்னாட்டும் நாடு - கடல் சூழ்ந்த நல்ல நாடுகளுக்குள், முன்னோடியாய் உள்ள நாடு

இவையனைத்தும் தன்னகத்தே கொண்டு நிடத நாடு மிகச் சிறப்புடன் இருந்ததை இப்பாடல் மூலம் அறிகிறோம்.


Reference :

Nalavenba - Tamil VU

Nalavenba - Tamil VU - page 2

Nala Thamayanthi story

Nalan story sanskrit - Sri Harsha

Thirunallaru



இரட்டுறமொழிதல்

தமிழுக்கென்று ஒரு தனிச்சிறப்பும் தொன்மையும் உள்ளது. ஆனால் , அது எந்த அளவு இளம் தலைமுறையைச் சென்றடைந்துள்ளது என்பது சந்தேகம்தான். தமிழில் ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய எண்ணற்ற படைப்புகள் உள்ளன. அவற்றில் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை பொதிந்த படைப்புகளை அனைவரும் அனுபவித்து மகிழ வேண்டும் என்ற ஆர்வத்தில் இதை இங்கே பதிவு செய்கிறேன்.

இரட்டுறமொழிதல் என்பது, இரண்டு பொருள்பட மொழிதல். அதாவது ஒரே பாடல் இரு பொருள் .இதைச் சிலேடை என்றும் கூறுவர். இந்த இரட்டுறமொழிதலில் வல்லவர் கவி காளமேகம். இவரது இயற்பெயர் வரதன். அம்பிகையின் அருள் பெற்றவர். விரைந்து மழை பொழியும் கருமேகம் போல் , இவர் விரைந்து கவி பாட வல்லவர் என்பதால் "காளமேகம்" என்று பெயர் பெற்றார். இவர் பல பாடல்களை இயற்றியுள்ளார். கீழ்வரும் பாடல் அவர் புலமைக்கு ஓர் சான்று.

ஒரு முறை கவி காளமேகம் சிதம்பரம் சென்றிருந்தார் . களைப்பு மிகுதியில் இருந்த அவரை அவ்வூர் மக்கள் கவனிக்கவில்லை. கோபம் கொண்ட அவர் ,

"எருக்கு முளைத்த தில்லை
இங்கு ஈசன் இருந்ததில்லை"


என்று பாடிவிட்டார். இதன் பொருள், இந்த தில்லை ( சிதம்பரம் ) தலத்தில் எருக்கு முளைக்கும் (வறட்சி ஏற்படும்). இங்கு ஈசன் இருந்தில்லை என்பதாகும்.

விவரம் அறிந்த ஊர் மக்கள் கவியிடம் சென்று , ஐயா இவ்வாறு பாடிவிட்டீர்களே என்று வருந்திய போது , அதற்குப் புலவர் நான் இவ்வாறு அல்லவா பாடினேன் என்று பின்வரும் விளக்கத்தை அளித்தார்.

"எருக்கு முளைத்ததில்லை
இங்கு ஈசன் இருந்த தில்லை"


அதாவது, இது ஈசன் உறையும் திருத்தலம். இறைவன் அருளால் என்றும் வளமாய் இருக்கும். ஆதலால் இங்கு எருக்கு முளைத்ததில்லை என்றார்.

Reference : 

Kalamegapulavar article - Dinamalar

Nataraja Deekshidhar - Blog

Kaalamegam - Wiki

Kalamega Pulavar - Wiki

சபாஷ்! சரியான போட்டி!

காலை நேரம். புகை மண்டலமும் , ஒலிப்பான் சத்தமும், அனைத்து வித வண்டிகளும் ஓடும் சாலை. நீங்கள் உங்கள் வண்டியில் செல்கிறீர்கள். அலுவலகத்தை 20 நிமிடத்துக்குள் அடைய வேண்டிய கட்டாயம் உங்களுக்கு. அதே குறிக்கோளுடன் செல்லும் பிற மக்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ உங்கள் முன். இந்தப் பரபரப்பில், நீங்கள் ஆட்டோவை இடித்துவிட்டீர்கள்.

அய்யய்யோ! உங்களை எப்படியெல்லாம் திட்டியிருப்பார் . நீங்கள் சென்னைவாசி என்றால் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். நினைக்கவே பொறுக்க முடியவில்லை. அதுவும் நம் தாய் மொழியின் சுடுசொற்கள் தாம் . "மூதேவி கழுதை ..... " இப்படி அந்த ஓட்டுநருக்கு வந்த கோபம் போல , ஒரு சமயம் நம் ஔவைப் பாட்டிக்கு வந்துவிட்டது.

ஒருமுறை ஔவையை அவமதிக்க எண்ணிய கம்பர், ஔவையை ஆரைக்கீரைக்கு ஒப்பிட்டு, கீழ்வரும் புதிரைக் கேட்டார்.

" ஒரு காலடி, நாலு பந்தலடி"

நான்கு இலைகள் கூரை போல் வேயப்பட்டு, ஒரு அடிப்பகுதி கொண்ட ஆரைக்கீரை அவ்வாறு காட்சியளிக்கும். இங்கு "டி" என்று ஔவையை நோக்கி ஒரு பெண்ணை அவமதிக்கும் சொல்லைப் பயன்படுத்தினார் கம்பர்.

ஔவைப்பாட்டி அதற்கு ஒரு அருமையான பாடலை விடையாகப் பாடினார்.

" எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேற் கூரையில்லா வீடே,
குலராமன் தூதுவனே , யாரையடா சொன்னாயடா?"


இதை அப்படியே நம் பேச்சு வழக்கில் சொன்னால்,

"மொகரகட்ட,எரும மாடு, மூதேவி, கழுதை, குட்டிச்சுவர்,குரங்கு,யாரடா சொல்ற நாயே " என்பதுதான் பொருள். "டா" என்று பதிலடி கொடுத்தார் ஔவை. இதன் உட்பொருளை சிந்திப்போமா?

"எட்டேகால் லட்சணமே" - நாம் கண் மை இடுகிறோம். அது கொஞ்சம் அதிகமாகிவிட்டாலும், அழகைக் கெடுத்துவிடுகிறது இல்லையா?. அதுபோல், லட்சணங்கள் 8 வகை உண்டு. எட்டேகால் லட்சணம் ( 8 - 1/4 கூடுதல்) என்பது இங்கு அவலட்சணத்தைக் குறிக்கிறது. மற்றும், 8 தமிழில் 'அ' என்றும் 1/4 'வ' என்றும் குறிக்கப்பெறும். ஆகையால், 8 1/4 - 'அவ' லட்சணம் ஆகும்.

"எமனேறும் பரியே" - பரி என்றால் குதிரை. ஆனால் , இங்கு எமனேறும் பரி என்றால் எமன் ஏறி வரும் எருமை மாடு என்று பொருள்.

" மட்டில் பெரியம்மை வாகனமே " - பெரிய அம்மை - அதாவது மூத்த சகோதரி- அக்கா - திருமகளின் அக்கா மூதேவி - மூதேவியின் வாகனம் கழுதை.

"முட்டமேற்கூரையில்லா வீடே" - முட்ட மேற்கூரை இல்லாத வீடு - குட்டிச்சுவர் என்று பொருள்.

"குலராமன் தூதுவனே" - ராமனுக்காகத் தூது சென்ற அனுமார். அதாவது, குரங்கு.

"யாரையடா சொன்னாயடா" - "யா" தமிழில் "ஆ" என்று குழந்தைகளிடம் சொல்வதுண்டு , " ஆனை ஆனை அழகு ஆனை" என்பது போலாகும்.

"யாரையடா "- யாரையடா அவமதித்துச் சொல்கிறாய் என்று கேட்பது போலவும்,

"ஆரையடா "- அது ஆரைக்கீரையடா என்று புதிருக்கு விடை சொல்வது போலவும் அமைந்துள்ளது.

"சொன்னாயடா " - சொன்னாய் என்றும், சொன்ன + நாய் என்றும் பொருள்படும்.
சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? 


Reference :

Thamizharukkaaga - Blog

Avvaiyar Thanippaadalgal - Wiki

Dinakaran Archive

Ettegaal Latchanam - Wiki

Naiyandi - Wiki

என் அன்னைத்தமிழுக்காக

அனைவருக்கும் அன்பான வணக்கம்!

இதை என் முதல் பக்கமாகக் கருதிப் படிக்கவும் . என்னைச் சிறு வயது முதல் தமிழின் மீது ஆர்வமும் பற்றும் கொண்டு வளர்த்த என் தாத்தாவிற்கு ( அமரர் திரு. இ.வெ. வரதராஜன் ) இதை மனதார உரித்தாக்குகிறேன் .

நான் தமிழில் முதல் முறையாக எழுதுகிறேன் . என்னால், இயன்ற வரையில், தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகிறேன் . இருப்பினும் அனைவருக்கும் செந்தமிழ் சென்றடையும் நோக்குடன், ஆங்காங்கே சில ஆங்கிலச் சொற்களும் பயன்படுத்தப்போகிறேன். இவற்றின் சொல்லில், பொருளில், இலக்கணத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தாலும், அவற்றையும் தாண்டித் தமிழின் பெருமை வெளிப்பட்டால் , அதுவே போதும்.

இந்தப் பதிவுகள் தொடர்பான கருத்துகளை ( comments,critics all inclusive ) , comments மூலம் சொல்லுங்கள். அவற்றை வரவேற்கிறேன். மேலும் ,வரும் காலங்களில் இந்தப் பதிவுகள் தொடர்பான ஒலி நாடாக்கள் மற்றும் உதவி ஆவணங்கள் ( தமிழில் தெளிவான உச்சரிப்புடன் படித்துப் புரிந்து கொள்ள மேலும் உதவும் - audio files helper files , ppt, pdf etc )ஆகியவற்றையும் இயற்றி, இங்கு பகிர எண்ணியுள்ளேன்.

நோக்கம்

தமிழின் பெருமையை, தனிச்சிறப்பை வார்த்தைகளில் கூற முடியவில்லை. தமிழும் அதன் தனிச்சிறப்பும் இளையதலைமுறையைச் சென்றடைய வேண்டும் .

" சுடர் விளக்காயினும் , தூண்டுகோல் வேண்டும் "

என்பதற்கு ஏற்ப என் வலைப்பூ (Blog) தமிழார்வம் இளைஞர்களிடம் பெருக ஓர் தூண்டுகோலாய் அமைந்தால் , மகிழ்ச்சி அடைவேன்.

இங்கு நான் தமிழார்வம் என்று குறிப்பிடுவது, தமிழின் ஆணிவேறாய்த் திகழும் , இலக்கியங்கள் அவற்றின் சொற்சுவை, பொருட்சுவை, அதில் கூறப்படும் வாழ்வியல் நெறிகள் , மறைபொருளாய் இருக்கும் அறிவியல், வரலாற்று உண்மைகள் பற்றித் தேடி அறியும் ஆர்வமாகும்.

எது இல்லை நம் தமிழில்? பல்லாயிரக்கணக்கான நூல்கள், நிகழ்ச்சிகள், வலைப்பதிவுகள்,இதழ்கள் அனைத்தும் இருப்பினும் மக்களிடம் அவை அதிகம் சென்றடைவதில்லை. ஏன் ?

ஓர் சிறிய உதாரணம் சொல்கிறேன் . தீபாவளியன்று திரைப்படங்களும் , திண்பண்டங்களும் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. அவ்விழாவின் முக்கியத்துவம் சொல்லும் பல பதிவுகள் இருப்பினும் , ( TV for example - தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அவை இடம்பெறும் கால அளவு மிகச் சில நேரங்களே.அதுவும் , அவை விடியற்காலையே முடிந்து விடும் .

தீபாவளி என்ற சொல்லிலேயே அதன் பொருள் உள்ளது.தீப + ஆவளி. அதாவது, தீபங்களின் வரிசை. இதை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்?

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை

இன்றைய மிகவிரைவான உலகில், நலவாழ்வு, மேலாண்மை,தொழில்நுட்பம் என எவ்வளவோ பேசி, தேடி, அலசி, ஆராயும் நாம் தமிழுக்கென்று ஓர் விநாடி ஒதுக்குவோம். இங்கு எண்ணற்ற மொழி, கலைகளின் அருமை அறிந்தவர்களைக் காண்கிறேன் ஆனால் , என் பார்வையில் இவை அனைத்தும் வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் காட்சியாகவே தெரிகிறது.

இதுவரை , தமிழுக்கானப் பதிவுகளை வலைதளங்களிலும் மற்ற ஊடகங்களிலும் கொண்டுச்சென்ற அனைவருக்கும் மிக்க நன்றி.மேலும் , இவைத் தொடர, சிறக்க, அவற்றின் நோக்கம் ஈடேறத் தமிழன்னையை வணங்குகிறேன்

For the love of Tamil....

Welcome to my micro space in this huge web . Without going into much details, I wish to share with you a few things that drove me to come up with this blog.

My love for Tamil language was kindled by my beloved grandfather, Late Shri E.V. Varadarajan thatha, who was a voracious Tamil reader and scholar. From what I could see around me, there were, are & will be some really fantastic and awe inspiring books, articles, blogs & websites dedicated for revealing the richness and magnificence of Tamil language to this world. However, I could see that people, especially the current generation of youth are unaware of the richness of our own mother tongue , partly due to the fact that Tamil is not greatly encouraged to be read & savoured apart from usual academics and due to under coverage(not easily accessible) of Tamil articles/literature in online world.

Actually, there are already several quality contents in online & offline world and truly, its a seeker's paradise out there. My intend with this blog is to create an awareness to our youth regarding the lasting legacy of our Tamil heritage and also kindle their interest in Tamil. Rather than searching Google aimlessly without knowing what all exists in Tamil literature, my blog would serve as a reference point for enthusiasts, who can further explore about it on their own.

At best, this blog is rather my online personal diary where I will research, collate and assimilate all my good old Tamil memories given by my thatha. That's a refreshing walk for me, down the lane :)

In future, based on my free time, I would be adding Tamil audio/help files that would guide the reader on proper pronunciation/diction of the Tamil verse. Also, an English translation or at least a transliteration of my posts in on the cards.

As with other things in life, eventually this blog would be refined over the time.


Your feedback and suggestions are always welcome.


Keep exploring....
Iswarya Ganesan